[X] Close

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை: அரசு துறைகளுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு


  • kamadenu
  • Posted: 18 Jun, 2019 08:53 am
  • அ+ அ-

அரசு உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுத் துறைகளுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இந்த தடை அமலுக்கு வந்தது. பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லுதல், இருப்பு வைத்தல், மற்றவர்களுக்கு பகிர்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு 3 முறை அபாராதம் விதிக்கப்படும், 4-வது முறை பயன்படுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும். பயன்படுத்தப்பட்ட, தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக்கை சேமித்தல், எடுத்துச் செல்லுதல், பகிர்தல், விற்பனை செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் பெரிய நிறுவனங்களுக்கு முதல்முறை ரூ.25 ஆயிரம், 2-வது முறை ரூ.50 ஆயிரம், 3-வது முறை ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

வணிக வளாகங்கள், துணிக்கடைகள், பல்பொருள் அங்காடிகள், வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால், முதல் முறை ரூ.10 ஆயிரம், 2-ம் முறை ரூ.15 ஆயிரம், 3-ம் முறை ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பிளாஸ்டிக் பயன்படுத்தும் மளிகை, மருந்துக்கடை உள்ளிட்ட நடுத்தர வகை கடைகளுக்கு ஆயிரம் ரூபாய் முதல் ரூ.5 ஆயிரம் வரையும், சிறிய கடைகளுக்கு ரூ.100 முதல் ரூ.500 வரையும் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

சென்னையில் பிளாஸ்டிக் தடை முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும், தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியது. மேலும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துமாறும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு அறிவுறுத்தியது. தமிழகம் முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. ஆனாலும், பிளாஸ்டிக்பயன்பாடு இன்னும் முழுமையாக குறையவில்லை.

இந்நிலையில், பிளாஸ்டிக் பொருட்கள் தடை அறிவிப்பின் மீதான நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில் பிளாஸ்டிக் தடை உத்தரவுக்குப் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நிறுவனங்களில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விரிவாக ஆய்வு நடத்தினார்.

அப்போது, ‘பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். அரசின் உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களை தொடர்ந்து ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சம்பந்தப்பட்ட துறைகளுக்கு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தினார். சுற்றுச்சூழலை மீட்டெடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.

ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், கே.சி.கருப்பணன், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலர் க.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ஹர்மந்தர் சிங், சுற்றுச்சூழல் துறை செயலர் ஷம்பு கல்லோலிகர் ஆகியோர் தலைமையில் தனியாக ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டம் தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘நடுத்தர வர்த்தக நிறுவனங்களான மளிகை, மருந்துக் கடைகள் 3 முறை அபராதம் விதித்த பின்னரும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால், அந்த நிறுவனங்களின் வணிக உரிமங்கள் ரத்து செய்யப்படும்.

3 முறை அபராதம் விதித்தபின் மீண்டும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் சிறிய வணிக கடைகள் மீது சாலையோர வியாபாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் இதுவரை 820.50 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1 கோடியே 58 லட்சத்து 69 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close