[X] Close

சென்ட்ரல் ரயில் நிலைய பகுதியில் நடக்கும் வழிப்பறி கொள்ளைகளை தடுக்க வேண்டும்: உங்கள் குரலில் வாசகர் கோரிக்கை


  • kamadenu
  • Posted: 18 Jun, 2019 08:48 am
  • அ+ அ-

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் வழிப்பறி கொள்ளைகளைத் தடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுவதால் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

மேலும், பணி நிமித்தமாகவும் கல்வி, மருத்துவம், சுற்றுலா செல்லுதல் என ஏராளமானவர்கள் தினமும் வந்து செல்வதால் இங்கு எப்போதும் கூட்டம் அலைமோதும். கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி சிலர் செல்போன், பணம் மற்றும் நகை பறிப்பில் ஈடுபடுகின்றனர். ரயில் நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இதுபோன்ற வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. இந்நிலையில், சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் செல்போனைப் பறிக்க சிலர் முயற்சித்துள்ளனர். இதுதொடர்பாக இந்து தமிழ் நாளிதழின் ‘உங்கள் குரல்’ பிரத்யேக எண்ணைத் தொடர்பு கொண்டு அவர் கூறும்போது, "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும், அங்குள்ள பேருந்து நிறுத்தத்திலும் பிக்பாக்கெட் திருடர்கள் அதிகமாகத் திரிகின்றனர். பெரும்பாலும் சென்னைக்கு புதிதாக வரும் பயணிகள், வழிப்பறி திருடர்களிடம் தங்களின் உடமைகளைப் பறிகொடுத்து விடுகின்றனர். இதைத் தடுக்கவும், பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, "சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தினமும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பண்டிகை நாட்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கும். இதைப் பயன்படுத்தி நகை, பணம், செல்போனை பறிக்க பிக்பாக்கெட் கொள்ளையர்களின் நடமாட்டமும் இருக்கும். அவர்களைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மஃப்டி உடை அணிந்த போலீஸாரும் மக்களோடு மக்களாகக் கலந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு அதில் பதிவாகும் காட்சிகள் கட்டுப்பாட்டு அறை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சந்தேக நபர்கள் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம். ரயில்வே பாதுகாப்பு படைக்கும் (182) புகார் தெரிவிக்கலாம்" என்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close