[X] Close

தேசிய கல்விக் கொள்கையை நிராகரிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு தி.க. தலைவர் கி.வீரமணி வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 18 Jun, 2019 08:40 am
  • அ+ அ-

டெல்லியில் 22-ம் தேதி நடக்க உள்ள மாநில கல்வி அமைச்சர்கள் கூட்டத்தில், தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.

‘தேசிய கல்விக் கொள்கை - 2019’ வரைவு அறிக்கையை இந்திய மாணவர் சங்கம் தமிழில் மொழிபெயர்த்துள்ளது. ‘தேசிய கல்விக் கொள்கை 2019 - தமிழில் அறிமுகம்’ என்ற பெயரில் இதை நூலாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று நடந்தது.

இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நூலை வெளியிட, முதல் பிரதியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் கி.வீரமணி பேசியதாவது:மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை-2019 வரைவு அறிக்கை ஆர்எஸ்எஸ் அமைப்பின் மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதன்மூலம் இடஒதுக்கீடு, சமூகநீதியை ஒழிக்க முயற்சிக்கின்றனர். ஜனநாயகம் மீதும், மாநில உரிமைகள் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். வரைவு அறிக்கையை வெளியிட்டு ஒரு மாதத்தில் எப்படி பொதுமக்கள் கருத்து தெரிவிக்க முடியும். எனவே, வரைவு அறிக்கையை தமிழ் உட்பட இந்திய அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளிலும் மொழிபெயர்த்து, அதன் மீது கருத்து தெரிவிக்க 6 மாதம் அவகாசம் அளிக்க வேண்டும்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் கூட்டத்தை அவசரமாக 22-ம் தேதி கூட்டியுள்ளனர். இந்த குறுகிய காலத்தில் வரைவு அறிக்கையை படித்து மாநில கல்வி அமைச்சர்கள் எப்படி கருத்து தெரிவிக்க முடியும். அந்த கூட்டத்தில், தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக நிராகரித்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு வீரமணி கூறினார்.

முன்னாள் துணைவேந்தரும், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத் தலைவருமான வே.வசந்திதேவி பேசும்போது, ‘‘மையமாக்குதல், வணிகமயமாக்கல், சாதியமயமாக்கல் ஆகிய 3 கருத்துகளை மையப்படுத்தி தேசிய கல்விக்கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதுநடைமுறைக்கு வந்தால், கல்வி மீதான மாநில அரசுகளின் உரிமைகள், அதிகாரங்கள் பறிபோகும்’’ என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், திமுக ஊடகப்பிரிவு தலைவர் கான்ஸ்டன்டைன், காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் கவுதம சன்னா, தமுமுக துணை பொதுச் செயலாளர் ஜெ.ஹாஜா கனி, பொது பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, இந்திய மாணவர்சங்க தென் சென்னை மாவட்ட செயலாளர் டி.சந்துரு, வடசென்னை மாவட்ட செயலாளர் இசக்கி நாகராஜ் ஆகியோரும் பேசினர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close