ஆளுநர் பொதுவெளியில் இப்படி கருத்துப் பேசுவதை தவிர்த்திருக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பணக்குடி அருகே கொங்கந்தான் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து கடந்த 23ம் தேதி அப்பகுதியில் உள்ள ஆற்றை கடக்க முயன்றபோது வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தார். அவரது இரு மகள்களுக்கும் தமிழக அரசு வழங்கிய தலா 2 லட்ச ரூபாய் நிதியை அப்பாவு இன்று நேரில் சென்று வழங்கினார்.
அப்போது சபாநாயகர் அப்பாவுவிடம் செய்தியாளர்கள், கோவை குண்டுவெடிப்புத் தொடர்பாக ஆவணங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, “நானும், கவர்னரைப் போல் பொதுவெளியில் இருப்பவன் தான். ஆனாலும் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல வேண்டி உள்ளது. அவர் எந்த ஆதாரத்தின் பேரில் இப்படிச் சொன்னார் எனத் தெரியவில்லை. அவரிடம் ஆதாரம் இருந்தால் அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று தகுந்த நடவடிக்கை எடுத்திருக்கலாம். அதைவிடுத்து ஆளுநர் பொதுவெளியில் இப்படி பேசுவதைத் தவிர்த்திருக்கலாம் என்பது எனது கருத்து. முதலில் அரசு விரைவாக செயல்பட்டது என்றும் ஆளுநர் சொன்னார். கோவை குண்டுவெடிப்பு கண்டிக்கத்தக்கது.
நான்கு நாள்கள் முழு விசாரணைக்குப் பின்பு காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்து பேசி, இவ்வழக்கை என்.ஐ.ஏவுக்கு முதல்வர் மாற்றியுள்ளார். கடந்த 2019 ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டுவெடிப்பில் கைதாகி சிறையில் இருந்தோரை முபின் சந்தித்துப் பேசியதாக அப்போதே என்.ஐ.ஏ விசாரணை நடத்தியது. பின்பு ஏன் அவரை விட்டது எனத் தெரியவில்லை. இப்போதுகூட பாஜகவும், என்.ஐ.ஏவும் சேர்ந்து அவருக்கு பயிற்சி கொடுத்ததாக விமர்சனம் வருகிறது. இதையெல்லாம் எந்த ஆதாரமும் இல்லாமல் கூறுபவர்களுக்கு என்ன பதிலோ, அதுதான் கவர்னருக்கும் பதில்!”என்றார்.