[X] Close

தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் முயற்சியினை கைவிட கோரி இன்று நெல்லையில் ஆர்ப்பாட்டம்: நாம் தமிழர் அறிவிப்பு


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 11:23 am
  • அ+ அ-

தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கிற முயற்சியினை கைவிட கோரி, நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின் கழிவுகளைச் சேமித்து வைக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கவிருக்கிற மத்திய அரசின் அறிவிப்பு ஏற்கெனவே அழிந்து வருகிற தமிழர் நிலத்தை ஒட்டுமொத்தமாக அளிக்கக்கூடிய நாசகர திட்டமாகும்.

தமிழக மக்களுக்கும், இந்த மண்ணுக்கும் பெரும் தீங்காக அமைந்திருக்கிற கூடங்குளம் அணு மின் நிலையத்தையே முழுதாக மூடக்கோரி பல ஆண்டுகளாக நாம் போராடிக்கொண்டிருக்கிற நிலையில், மானுட வாழ்க்கைக்கும், இந்த நிலத்திற்கும் பேராபத்தினை விளைவிக்கக்கூடிய அணுக்கழிவுகளைச் சேமித்து வைக்க அணுக்கழிவு மையத்தை கூடங்குளம் அணு உலை அருகிலேயே அமைக்க முற்படும் மத்திய, மாநில அரசுகளின் திட்டம் வன்மையானக் கண்டனத்திற்குரியது.

1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஓர் அணு உலையில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 27 ஆயிரம் கிலோ எடையுள்ள கழிவுகள் வெளியாகிறது. இவ்வாறு வெளியாகும் அணுக்கழிவுகள் அணு உலைக்குள்ளேயே சேமித்து வைக்கப்படுகின்றன. அவற்றினை 7 வருடங்களுக்கு மட்டுமே அங்கு வைத்திருக்க முடியும்.

அதன்பிறகு, அங்கிருந்து வெளியேற்றி தற்காலிக அணுக்கழிவு மையத்திற்குக் (ஏ.எஃப்.ஆர்) கொண்டுச் செல்ல வேண்டும். இத்தகைய அணுக்கழிவுகள் என்பது ஏறத்தாழ 48 ஆயிரம் ஆண்டுகள் கதிர்வீச்சுத் தன்மையுடன் இருக்கக்கூடியவை. இக்காலக்கட்டத்திற்குள் ஏதாவது ஒரு பேரிடர் ஏற்பட்டு அணுக்கழிவுகளின் கதிர்வீச்சுகள் வெளிப்பட்டால் தமிழகமே மிகப்பெரியப் பேரழிவைச் சந்திக்க நேரிடும். இந் நிலத்தில் உயிர்கள் வாழ முடியாத நிலை ஏற்படும்.

கூடங்குளம் அணு உலை இயங்குவதற்கு 15 நிபந்தனைகளை விதித்தே உச்ச நீதிமன்றம் இயங்க அனுமதித்தது. அவற்றுள் முதன்மையானது, ஏ.எஃப்.ஆர்-ஐ ஐந்தாண்டுகளுக்குள் அமைத்து முடிக்க வேண்டும் என்பதாகும். அக்காலக்கெடு 2018, மார்ச் மாதத்தோடு முடிவடைந்த நிலையிலும், 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை மேலும் ஐந்தாண்டுகள் கால அவகாசம் கேட்டிருக்கிறது இந்திய அணுசக்தித்துறை.

கூடங்குளத்தில் அமைக்கப்பட்டிருப்பது மென் நீர் உலை என்பதால் ஏகப்பட்ட சிக்கல்களையும், இடர்பாடுகளையும் சந்தித்து வருவதாகக் கூறி, தற்காலிக அணுக்கழிவு மையத்தை அமைப்பதற்கே திக்கித் திணறி வருவதை இந்திய அணுசக்தித் துறையே ஒத்துக்கொண்டிருக்கிறது.

மேலும் கூடங்குளம் அணு உலை தொடர்பாக நாளிதழ்களில் அவ்வப்போது வெளியாகும் செய்திகள் அணு உலை அமைக்கப்பட்ட விதத்திலேயே இருக்கின்ற சிக்கல்களை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இத்தகைய அசாதாரண நிலையில் உருவாக்கப்படும் அணுக்கழிவு மையம் எந்த நிலையிலும் பாதுகாப்பானதாக இருக்க முடியாது.

இந்த மண்ணில் வாழக்கூடிய மக்களை சோதனைக்கூட எலிகளாக கருதி இது போன்ற பேரழிவு திட்டங்கள் இந்த மண்ணில் நடைமுறைப்படுத்தப்படுவது இம்மண்ணில் வாழக்கூடிய ஒவ்வொரு தமிழனின் உயிர் பாதுகாப்புக்கு எதிரானது மட்டுமல்ல சுற்றுப்புற சூழல் பெருந்தீங்கினை ஏற்படுத்துவது ஆகும்.

ஒருவேளை தற்காலிக அணுக்கழிவு அமையம் அமைக்கப்பட்டுவிட்டாலும்கூட அத்தோடு சிக்கல் முழுவதுமாகத் தீரப்போவதில்லை. ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் அணுக்கழிவுகளை தற்காலிக மையத்தில் சேமித்து வைக்க முடியும்.

அதன்பிறகு, அவற்றை அதிக ஆழத்தில் அமைக்கப்படக்கூடிய நிரந்தர அணுக்கழிவு மையத்திற்குப் (டி.ஜி.ஆர்.) பாதுகாப்பாக நகர்த்த வேண்டும். இதுவரை நிரந்தர அணுக்கழிவு மையத்தை எங்கு அமைப்பது என்பதையே இந்திய அணுசக்தித் துறை முடிவு செய்யவில்லை. இதுவரை நிரந்தர அணுக்கழிவு மையம் அமைத்திட எந்த இந்திய மாநிலமும் ஒத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ‌.

நிரந்தர அணுக்கழிவு மையத்தை கர்நாடக மாநிலம், கோலாரில் பயன்பாட்டில் இல்லாத பழைய தங்கச் சுரங்கங்களில் அமைப்போம் என்று 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணுசக்தித் துறை அறிவித்தபோது, அதற்கு அம்மாநிலக் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அம்முயற்சி முற்றாகக் கைவிடப்பட்டது. இதுவரை எந்த இடத்தில் நிரந்தர அணுக்கழிவு மையம் அமைப்பது என்கின்ற எந்த முடிவினையும் இந்திய அணுசக்தி துறை எடுக்கவில்லை.

நிரந்தர அணுக்கழிவு மையம் வைப்பதற்கான தொழில்நுட்பத்தை இதுவரை இந்தியா பெறாத நிலையில் கூடங்குளத்தில் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைக்க இந்திய அணுசக்தித் துறை முடிவு செய்திருப்பது என்பது மத்திய அரசு நேரடியாக தமிழர்கள் மீது தொடுக்கின்ற சூழலியல் போர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள சான் க்ளெமென்ட் நகரத்தின் கடற்கரையில் சான் ஓனோஃபெர் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. மூன்று அணு உலைகளைக் கொண்ட அம்மின் நிலையம் 2013-ம் ஆண்டு கைவிடப்பட்டுவிட்டப் பிறகும், அங்கிருக்கிற அணுக்கழிவுகளை எவ்வாறு கையாள்வது என்று தெரியாமல் அறிவியல் வளர்ச்சி நாடான அமெரிக்க வல்லாதிக்கமே திகைத்து நிற்கிறது.

உலகளாவிய அளவில் அணுக்கழிவுகளை கையாள்வதற்கான அறிவியல் இன்னும் வளராத சூழலில் தமிழகத்தில் கூடங்குளம் அணு உலையில் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைக்க முடிவு செய்திருப்பது என்பது தமிழகத்திற்கு பேராபத்தை உண்டாக்குகின்ற எதேச்சதிகார நடவடிக்கை.

அணுக்கழிவு கதிர்வீச்சு வெளிப்பட்டதால் தற்காலத்தில் ஜப்பான் நாட்டின் புகுஷிமாவில் நடந்த பேரழிவைக் கண்கூடாகக் கண்டும்கூட அதிலிருந்து படிப்பினைகள் கற்றுக்கொள்ளாத இந்திய அரசு தமிழகத்தை சோதனைக் கூடமாக மாற்ற விரும்புவது எதனாலும் அனுமதிக்க முடியாது.

ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ மையம், அணு உலை, அணுக்கழிவு அமையம் எனப் பேராபத்து நிறைந்த அழிவுத்திட்டங்களையெல்லாம் தமிழ் நாட்டின் மீது திணிப்பதன் மூலம் இந்தியாவின் குப்பைத்தொட்டியாகத் தமிழ்நாடு பயன்படுத்தப்படுகிறது என்கின்ற எண்ணம் ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் குமுறல்களாக வெளிப்படுகிறது.

எனவே, தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கிற முயற்சியினை மத்திய அரசும் இந்திய அணுசக்தித் துறையும் உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், கூடங்குளம் அணு மின் நிலையத்தினை நிரந்தரமாக மூட வழிவகைகளைச் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணி அளவில் எனது தலைமையில் திருநெல்வேலி, ராதாபுரம் கலையரங்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது", என சீமான் தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close