[X] Close

கருணாநிதிதான் கிரிக்கெட்டை கற்றுக்கொடுத்தார், தோனி ஒரு கதாநாயகன்: துரைமுருகன் கலகல பேட்டி


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 15:58 pm
  • அ+ அ-

கிரிக்கெட்டை கிண்டலடித்த தன்னை அருகில் அமரவைத்து அரைமணி நேரத்தில் கிரிக்கெட் பற்றி சொல்லி ஆர்வத்தை தூண்டியவர் கருணாநிதி. சிஎஸ்கே 1 ரன்னில் தோற்றபோது இரவு முழுதும் தூங்கவில்லை என துரைமுருகன் ஜாலி பேட்டி அளித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தன்னுடைய சீரியசான அரசியல் நிகழ்வுக்கு இடையே கிரிக்கெட்டும் நானும் கருணாநிதியும் என பழைய நினைவுகளையும், தோனியைப்பற்றியும், உலககோப்பையை இந்தியா வெல்லுமா என்பது பற்றியும் சுவையாக பேசியுள்ளார்.

அவரது பேட்டி வருமாறு:

“ஆரம்ப பள்ளியிலிருந்து கல்லூரிவரை எனக்கு தெரிந்த விளையாட்டு சடுகுடுதான். கல்லூரியில் ஹாக்கி, அதன்பின்னர் புட்பால் ஆடினேன் அதன்பின்னர் அதை விட்டுவிட்டேன். ஆனால் கிரிக்கெட் எனக்கு சுட்டுப்போட்டாலும் வராது.

வாணியம்பாடியில், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தபோதும், சட்டக்கல்லூரியில் படித்தபோதும் கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாது. 11 முட்டாள்கள் ஆட 11 ஆயிரம் முட்டாள்கள் பார்க்கும் விளையாட்டு என கிண்டல் அடிப்பேன்.

எத்தனை கோல் அடித்தார்கள் என்றுதான் கேட்பேன். ஆனால் தலைவர் கலைஞர் அப்படி அல்ல. கிரிக்கெட்டின் அத்தனை விஷயங்களும் அத்துப்படி. எவ்வளவு வேலை இருந்தாலும் அப்படி ரசிப்பார். என்ன ஸ்கோர் என்று கேட்காமல் இருக்கமாட்டார், அது தெரியாவிட்டால் அவருக்கு தலை வெடித்துவிடும்.

கிரிக்கெட்டில் எதற்கு அடித்தார்கள், எதற்கு கைத்தட்டினார்கள் என்று எதுவும் எனக்கு தெரியாது. இப்படி இருப்பதைப்பார்த்து ஒருநாள் என்னை அழைத்து என் பக்கத்திலேயே உட்கார் உனக்கு சொல்லித்தருகிறேன் என்று சொன்னார். அரை மணி நேரத்தில் அனைத்தையும் சொல்லித்தந்தார்.

அதன்பின்னர்தான் எனக்கு கிரிக்கெட்டில் ஒரு ஆர்வம் வந்தது. இப்போதும் கிரிக்கெட்டின் அனைத்து அம்சங்களையும் அறிந்தவன் அல்ல. ஆனால் ஆட்டம் எப்படி ஆடுகிறார்கள் என்பது தெரியும். அதனால்தான் விடிய விடிய உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு ஆர்வம் வந்துவிட்டது.

அவருடன் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் பார்க்கும் காலத்தில் எனக்கு கிரிக்கெட் தெரியாது. அப்ப டீ, டிஃபன் எல்லாம் வரும், அதையெல்லாம் துரைகிட்ட கொடுங்கன்னு சொல்லிட்டு மேட்சைப்பார்த்து ரசிப்பார். அந்த பால் ஏன் அங்கப்போச்சு, இவர் ஏன் இப்படி அடித்தார் என்றெல்லாம் கேட்பேன். பேசாம இருய்யா அப்புறம் சொல்வேன் என்பார்.  

அவருடன் வீட்டில் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தபபின் நான் கிரிக்கெட் பற்றி அறிந்துக்கொண்டேன். அதனால் இன்றைக்கு அப்படி ஒரு இண்ட்ரஸ்ட். இங்குள்ள டி.20 ஐபிஎல் மேட்சில் எல்லோரும் பிரிந்து தனித்தனி டீமில் இருந்தார்கள். இப்ப அனைவரும் உலககோப்பையில் ஒன்றிணைந்துள்ளனர்.

தோனி, ரோகித்ஷர்மா, கோலி இவர்கள் எல்லாம் மிகப்பெரிய ஜாம்பாவன்கள். அப்படி ஒரு ஆட்டம் ஆடுகிறார்கள். தோனி ஒரே நிதானமாக ஆடுவார். படபடன்னு அடிக்கமாட்டார். ஆனால் ரன்னை எடுத்துக்கொண்டே இருப்பார். சிக்சர் அடிக்க ஆரம்பித்தால் அவரை மிஞ்சியவர்கள் யாருமில்லை.

இன்றைக்கும் கிரிக்கெட் பிளேயர்களில் கதாநாயகனுக்குரிய போற்றுதலுக்குரியவர் தோனி. அந்த நிதானம்தான் அவரை நிறுத்துகிறது. கேட்சி பிடித்தாலும், அவுட் ஆனாலும் ஒரே நிதானம்தான் அதுதான் அவருக்கு சிறப்பு. நேற்று ரோகித்ஷர்மா எடுத்த சதம் அற்புதமானது.

நம்ம போலிங்தான் கொஞ்சம் வீக், ஆனால் இப்ப எல்லோரும் ஒன்றாக சேர்ந்ததால் அதை சரி செய்துவிட்டார்கள். இன்று நியூசிலாந்துடன் மேட்ச் இந்தியா நிச்சயம் வெல்வார்கள். இந்தியா கட்டாயம் கோப்பையை வெல்லும். என்னுடைய வாழ்த்துகள்.

எனக்கு எந்த வேலை இருந்தாலும் விளையாட்டை ரசிக்க உட்கார்ந்துவிடுவேன். இந்தியா பாகிஸ்தான் விளையாட்டில் எனக்கு வேறுபாடு எதுவும் இல்லை. விளையாட்டை ரசிக்கணும். பாகிஸ்தானில் அற்புதமான வீரர்கள் உள்ளனர். விளையாட்டில் வேற்றுமை பாராட்டக்கூடாது.

அதை ரசிக்கணும். அரசியல் கண்ணோட்டதோடு பார்க்கக்கூடாது. சிஎஸ்கே ஒரு ரன்னில் தோற்ற அன்று எனக்கு தூக்கமே வரவில்லை. சீனிவாசன் சாருக்கு போன் போட்டு என்ன சார் இப்படி பண்ணிட்டாங்களேன்னேன்” இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close