[X] Close

மோசடி குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு தயங்குவது ஏன்?- சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி


  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 09:02 am
  • அ+ அ-

போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக் கில், குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ள நிலையில், வழக்கு விசா ரணையை எதிர்கொள்ள அவர் தயங்குவது ஏன் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2011-15 அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.95 லட்சத்தை பெற்றுக்கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக சென்னை மாநகர அரசு போக்கு வரத்துக் கழக ஊழியர் கணேஷ் குமார் என்பவர் மத்திய குற்றப் பிரிவில் கடந்த 2016-ல் புகார் கொடுத்தார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜி, சகாயராஜ், பிரபு உள்ளிட் டோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பல்வேறு பிரிவுகளில் கடந்த 2017-ல் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். ‘அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் தன் மீது இந்த வழக்கு பொய்யாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்று அதில் கோரியிருந்தார்.

இந்நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இந்த மனு மீதான விசா ரணை நேற்று நடந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏஆர்எல் சுந்தரேசன் தனது வாதத்தில் கூறியதாவது:

பணம் கொடுத்ததாக கூறப் படும் சம்பவம் நடந்து 2 ஆண்டு கள் கழித்தே புகார் அளிக்கப் பட்டுள்ளது. மனுதாரர் நேரடியாக பணம் பெற்றதாக புகாரில் எங்கும் கூறப்படவில்லை. மாறாக, புகார் கொடுத்தவர்தான் மோசடியாக பின்வாசல் வழியாக பணிநியமனம் பெற முயற்சித்துள்ளார்.

இந்த புகாரை போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை. அரசியல் ரீதியாகவே இந்த வழக்கு பொய்யாக பதிவு செய்யப் பட்டுள்ளது. எனவே, விசா ரணைக்கு தடை விதித்து, வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ள நிலையில், கீழமை நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள செந்தில் பாலாஜி தயங்குவது ஏன்?’’ என்று கேள்வி எழுப்பினார். தற்போதைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்றும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக கூடுதலாக நீதிமன்ற உத்தரவுகளை தாக்கல் செய்யவேண்டி இருப்பதால் விசாரணையை தள்ளிவைக்குமாறு செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, இறுதி வாதத்துக் காக வழக்கு விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close