[X] Close

எனது வெற்றியை முறியடிக்க சதி நடந்தது! - அனல் கக்கும் திருமாவளவன்


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 14:17 pm
  • அ+ அ-

-கே.கே.மகேஷ்

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகம் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வென்ற அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. நிர்வாகிகள் தரும் இனிப்புகளை அங்கு வரும் தொண்டர்களுக்குத் தன் கையாலேயே ஊட்டிவிடுகிறார் திருமா. தேர்தல் களைப்பு, ரம்ஜான் நோன்பிருப்பதால் ஏற்பட்ட சோர்வு எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் உற்சாகமாகவே இருக்கிறார். தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசும்போது அனல் பறக்கிறது அவரது பேச்சில். இதோ அவரது பேட்டி.

 உங்களது தொகுதி வாக்கு எண்ணிக்கை, கடைசி நிமிடம் வரை பரபரப்பாக இருந்ததே... என்னதான் நடந்தது?

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு 23-ம் தேதி காலை ஏழு மணிக்குச் சென்றேன். மறுநாள் அதிகாலை மூன்று மணிக்குத்தான் வெளியே வந்தேன். அதுவரை பரபரப்புதான். முதல் சுற்றில் விசிக முன்னணி பெற்றது மகிழ்ச்சி தந்தது. ஆனால், இரண்டாம் சுற்றிலிருந்து 9-வது சுற்று வரை அதிமுக முன்னணியில் இருந்தது. இனி அதைப் பின்னுக்குத் தள்ள முடியாது என்ற எண்ணம் எனக்கே ஏற்பட்டுவிட்டது. தலித் மக்கள், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளின் வாக்குகள் இன்னமும் எண்ணப்படவில்லை என்று தோழர்கள் சுட்டிக்காட்டினார்கள். எதிர்பார்த்ததைப் போலவே 10-வது சுற்றிலிருந்து விசிக முன்னணியில் இருந்தது. அதன் பிறகு பின்தங்கவேயில்லை.

ஆனால், அதிமுக வென்றுவிட்டதாக அன்றைய இரவில் அடிக்கடி தகவல்கள் வெளியாகினவே?

ஆம். இடையிடையே அப்படி ஒரு வதந்தி பரவியது. அதிமுக வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப் போவதாகவும் அதற்காக மேலிடத்திலிருந்து பெரிய அழுத்தம் வந்திருப்பதாகவும் சொன்னார்கள். 19-வது சுற்றின்போது, திடீரென்று காவல் துறையினரும் பெரும் அளவில் குவிக்கப்பட்டார்கள். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே நின்ற விசிகவினரைக் காவல் துறையினர் விரட்டியடிப்பதாகவும் தகவல் வந்தது. இதுதான் எனக்குச் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியது. நான் தோல்வியைக் கண்டு துவள்பவன் அல்ல. ஆனால், முன்னணியில் இருக்கிறபோதே நம்முடைய வெற்றியைத் தட்டிப்பறிக்கப் பார்க்கிறார்கள்; சட்டமன்றத்

துக்கு காட்டுமன்னார்கோயிலில் போட்டியிட்டபோது எப்படி அறிவித்தார்களோ, அதைப்போல அறிவிக்கப்போகிறார்கள் என்றெல்லாம் அடுத்தடுத்து வந்த தகவல்கள் பதற்றத்தை ஏற்படுத்தின. எனவே, கூடுதல் விழிப்புடன் செயல்பட்டோம். ஒவ்வொரு

சுற்றுவாரியாக எங்கள் வாக்குகளைச் சரிபார்த்துக்கொண்டே இருந்தோம். கடைசியாக, 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் விசிக வெற்றி என்று அறிவித்தார் தேர்தல் நடத்தும் அலுவலர்.

கடும் போட்டிக்குப் பிறகு கிடைத்த இந்த வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

வெற்றி தோல்வியைப் பற்றிக்கூட நான் பெரிதாகக் கவலைப்படவில்லை. ஆனால், தமிழ்நாடு முழுவதும் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றிபெறுகிறபோது, சிதம்பரம் தொகுதியில் மட்டும் இப்படி நடந்திருப்பதற்கு என்ன காரணம் என்ற யோசனையில் நான் ஆழ்ந்துபோனேன். இன்னொரு தகவல் ஊடகவியலாளர் ஒருவர் மூலம் வந்தது. அதாவது, 70 சதவீதத்துக்கும் குறைவாக பேட்டரி சக்தி எஞ்சியுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் விசிக முன்னணியில் இருப்பதாகவும், 90 சதவீதத்துக்கு மேல் பேட்டரி சக்தி எஞ்சியிருக்கிற இயந்திரங்களில் அதிமுகவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியிருப்பதாகவும் அவர் சொன்னார்.

வாக்குப்பதிவு முடிந்து ஒரு மாதமாக மூடிவைக்கப்பட்ட இயந்திரங்களில், மின்சக்தி இழப்பு ஏற்படுவதுதானே இயல்பு. இடையில் என்ன நடந்திருக்கும் என்ற சந்தேகத்தை அவர் எழுப்பினார். இதற்கெல்லாம் எங்களிடம் ஆதாரம் இல்லை. சிதம்பரம் தொகுதியில் வென்றது எனக்கு ஆறுதலாக இருந்ததே தவிர, மகிழ்ச்சியாக இல்லை. ஏனென்றால், டெல்லியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டது.

வாக்குப்பதிவு இயந்திரத்தை எதிர்க்கின்ற கட்சிகள் தேர்தலில் வென்றுவிட்டால் அந்த எதிர்ப்பை அப்படியே கைவிட்டுவிடுகின்றன. தோற்றவர்கள் மட்டுமே குறை சொல்கிறார்கள். நீங்கள் இப்போது என்ன சொல்கிறீர்கள்?

மின்னணு வாக்குப்பதிவு முறையின் மூலம் வெற்றி பெற்றிருந்தாலும்கூட, இந்த முறையை மாற்ற வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறேன். வாக்குப்பதிவு இயந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது என்ற கருத்தில் இப்போதும் உறுதியாக இருக்கிறேன். அறிவியல்பூர்வமாகவும் அது நிறுவப்பட்டிருக்கிறது. தேனியிலும் அதுதான் நடந்திருக்கிறது என்று சந்தேகிக்கிறேன்.

சிதம்பரம் தொகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உங்களுக்கு எதிராகக் களப்பணியாற்றியதே... என்ன காரணம்?

மதவாதத்தை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். 2016 சட்டமன்றத் தேர்தல் முடிந்த கையோடு ‘மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு’ நடத்தினோம். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தினோம். அப்போதே என்னைக் குறிவைத்துவிட்டார்கள். அதிமுக, பாமக, இந்துத்துவ சக்திகள் என்று மும்முனைத் தாக்குதல் நடந்தது.

ஆனாலும், இந்து மக்களின் ஆதரவோடுதான் வென்றேன். எனக்கு வாக்களித்தவர்களில் பெரும்பான்மையானோர் இந்துக்களே.

இந்தத் தேர்தலில், சாதி அடையாளமுள்ள தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை மக்கள் புறந்தள்ளிவிட்டார்கள் என்று சொல்லலாமா?

அதிமுக சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோற்றிருக்கிறார்களே, அவர்கள் என்ன சாதி அடையாளத்துடனா நின்றார்கள்? மதவாத பாஜகவைக் கூட்டணியில் சேர்த்ததால்தான் அதிமுக இவ்வளவு பெரிய தோல்வியைத் தழுவியிருக்கிறது.

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இல்லாத நெருக்கடி ஏன் உங்களுக்கு வந்தது?

என்னுடைய வெற்றியை ஒரு சமூகத்தின் எழுச்சியாக, வெற்றியாகப் பார்க்கிறார்கள். ‘இந்த வெற்றியை ஒட்டுமொத்தமாக தலித் மக்கள் கொண்டாடுவார்கள். அது நம்முடைய ஆதிக்கத்தைத் தகர்த்துவிடும்’ என்கிற அச்சம்தான் என் வெற்றியை அவர்கள் தடுக்க முயன்றதற்கான காரணம்.

திருமாவளவனுக்குத் திமுகவினர் சரியாக வேலை பார்க்கவில்லை, பிற சாதியினர் பெருவாரியாக வாக்களிக்கவில்லை என்றெல்லாம் எழுந்திருக்கும் புகார்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எனக்காக வேலை பார்த்த திமுகவைச் சேர்ந்த தலித் அல்லாதவர்கள், வன்னியர்கள் சாதி மற்றும் மதவாதிகளின் வசவுகளுக்கும் ஏளனத்துக்கும் உள்ளானார்கள். அதையெல்லாம் தாங்கிக்கொண்டு என்னுடைய வெற்றிக்காக அவர்கள் பாடுபட்டார்கள் என்பதுதான் உண்மை. தலித் வாக்குகளை மட்டும் பெற்று நான் வெற்றி பெறவில்லை. திமுக கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளையும் தலித் அல்லாதோரின் வாக்குகளையும் பெற்றுள்ளேன். எனவே, சமூக வலைதளங்களில் மனம் போன போக்கில் விமர்சனங்கள் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்களை அறிவுறுத்தியிருக்கிறேன்.

தமிழகத்துக்கு வெளியே வலுவான கூட்டணியை அமைக்கத் தவறியது காங்கிரஸின் தோல்விக்கு முக்கியக் காரணமா?

தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் கொள்கை அடிப்படையில் ஆபத்தான கட்சியாக பாஜகவைப் பார்க்க மக்கள் தயாராக இல்லை. காங்கிரஸ் கட்சிக்குக்கூட பாஜகவை எதிர்ப்பதற்கு அரசியல் காரணம் இருந்ததே தவிர, கொள்கை காரணம் இல்லை. ஆனால், கம்யூனிஸ்ட்களும், நாங்களும், திமுகவும் பாஜகவை எதிர்ப்பதற்குக் கொள்கை காரணம் இருக்கிறது. இந்தப் பார்வை பிற மாநில கட்சிகளிடம் இருந்திருந்தால், மோடி எதிர்ப்பு வாக்குகளைச் சிதறவிடாமல் தடுத்திருப்பார்கள். காங்கிரஸும் இன்னும் கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

திமுகவின் வெற்றி பயனற்றது. இவர்களால் தமிழகத்திற்கு எந்தத் திட்டத்தையும் பெற்றுத்தர முடியாது என்று சிலர் சொல்கிறார்களே?

ஆளுங்கட்சியாக இருந்தால்தான் மக்களுக்குத் தொண்டு செய்ய முடியும் என்று நினைப்பது பதவி மோகம் கொண்டவர்களின் கருத்து. மதவாத சக்திகளிடமிருந்து நாட்டையும் அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்கவும், உரிமைகளைக் காப்பாற்றவும் திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட வேண்டியிருக்கிறது. பெரிய எதிர்க்கட்சிகள் இல்லாத சூழலில், நாட்டைப் பாதுகாக்க திமுக கூட்டணிக் கட்சிகளுக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு மகத்தானது.

திமுக தலைவர் ஸ்டாலினின் செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்து என்ன?

கலைஞர் இல்லாத நிலையில் கட்சியைக் கட்டுக்கோப்பாக வழி நடத்துகிறார். போராட்டக் களங்களில் கைகோத்த அத்தனை கட்சிகளையும் வெற்றிகரமாக ஒருங்கிணைத்திருக்கிறார். அத்தனை தொகுதிகளிலும் வெற்றிபெற கடுமையாக உழைத்ததும், கூட்டணிக் கட்சித் தலைவர்களை அனுசரித்துச் சென்றதும் அவரது முக்கியமான சாதனைகள். கலைஞர் இல்லை என்ற இடத்தை அவர் இட்டு நிரப்பியிருக்கிறார்.

பெரியார் பிறந்த மண்ணில் பாஜகவுக்குப் பெரும் தோல்வி கிடைத்திருக்கிறது. அம்பேத்கர் பிறந்த மகாராஷ்டிரத்தில் இது சாத்தியமாகவில்லையே... ஏன்?

வெற்றிக்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் திரட்சி மட்டும் போதாது. அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய ஜனநாயக சக்திகளின் எழுச்சிதான் முக்கியமானது. குஜராத் காந்தி பிறந்த மண்தானே? அங்கே பாஜகதானே வலிமை பெற்றுவருகிறது? அந்தந்தக் காலகட்டத்திற்கு ஏற்ப தலைவர்கள் உருவாகிறார்கள். அவர்கள் அந்த மக்களை எப்படி வழி நடத்துகிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் வெற்றி இருக்கிறது. அதற்காக அம்பேத்கர் சிந்தனை, பெரியார் சிந்தனை இல்லாமல் போய்விடவில்லை. தமிழகத்தைப் பார்த்து பிற மாநிலங்களிலும் பெரியாரைப் பற்றி பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

உங்களுக்குப் பிறகு கட்சி தொடங்கிய தினகரன், சீமான், கமல்ஹாசன் வாங்கிய வாக்குகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

திமுக, அதிமுகவுக்கு எதிரான மனநிலை கொண்டோரும், இளைய தலைமுறையினரில் ஒரு பிரிவினரும் இவர்களுக்கு வாக்களித் திருக்கிறார்கள். ஜெயலலிதா, கருணாநிதி காலத்திலேயே மதிமுக, தேமுதிக, பாமக என்று பிற கட்சிகளுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் வாக்களித்திருக்கிறார்கள். ஆனாலும், தனிப் பெரும் கட்சிகளாக அக்கட்சிகள் வளர முடியவில்லை. ஏதாவது ஒரு அணியில் சேர வேண்டிய நிலைமைதான் வந்தது. இந்தத் தேர்தலில் அமமுக, நாம் தமிழர், மநீமவுக்குக் கிடைத்திருக்கும் வாக்குகள், புறக்கணிக்கத்தக்க அளவுக்குக் குறைவானவை. ஆனால், காலம் எப்போதும் இதே மாதிரி இருக்காது!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close