[X] Close

பள்ளிக்குள் மாணவியிடம் நகை பறிக்க முயற்சி; பள்ளியில் பாதுகாப்பற்ற சூழல்: பெற்றோர் முற்றுகை போராட்டம்


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 08:38 am
  • அ+ அ-

பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புகுந்து மாணவியிடம் செயின் பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிபாளையம் ஆவாரங்காட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியில் 2,500-க்கும் மேற்பட்ட மாணவியர் பயின்று வருகின்றனர். கடந்த 6-ம் தேதி பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவி பள்ளி வளாகத்தில் உள்ள சுகாதார வளாகத்திற்குச் சென்றுள்ளார்.

அப்போது பள்ளியின் சுற்றுச்சுவரை ஏறிக் குதித்த மர்ம நபர் மாணவியின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றதுடன், தவறாக நடக்க முயற்சித்ததாகவும் தெரிகிறது. அதிர்ச்சியடைந்த மாணவி அலறியடித்தபடி சுகாதார வளாகத்தை விட்டு வெளியே வந்துள்ளார். அவரது சத்தம் கேட்டு பிற மாணவியரும் அங்கு திரண்டனர். உடனே, மர்ம நபர் அங்கிருந்து தப்பிவிட்டார். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் சரஸ்வதி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், பள்ளிபாளையம் போலீஸிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேலாகியும் மர்மநபர் கைது செய்யப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் கூறி, மாணவியரின் பெற்றோர் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பள்ளி தலைமையாசிரியர் சரஸ்வதி, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரிய கழகத்தினர் மற்றும் போலீஸார் சமரசம் செய்தனர். மேலும், பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமரா வைத்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என்றும் ,மர்ம நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவியரின் பெற்றோர் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close