[X] Close

சென்னையில் ரூ.3000 லஞ்சம் வாங்கி சிக்கிய பெண் ஆய்வாளர்: கையுங்களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீஸார்


3000

  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 21:32 pm
  • அ+ அ-

வாகனச் சோதனையில் சிக்கிய வாகனத்தை விடுவிக்க ரூ.3000 லஞ்சம் கேட்ட ஆதம்பாக்கம் குற்றப்பிரிவு பெண் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பொறிவைத்து பிடித்தனர்.

சென்னை ஆதம்பாக்கம் குற்றப்பிரிவு காவல்துறை ஆய்வாளராக பணியாற்றுபவர் பூமாதேவி. 2004 பேட்ச் அதிகாரியான இவர் சில மாதங்களுக்கு முன் மக்களவை தேர்தலை ஒட்டி மாற்றப்பட்டு ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியில் இணைந்தார்.

சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு பணிமுடிந்து ஆதம்பாக்கம் சாலை வழியாக தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது இரவு நேர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளர் பூமாதேவி, கண்ணனின் இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனையிட்டார். கண்ணனிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது கண்ணன் ஓட்டிவந்த வாகனத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. திருட்டு வாகனத்தை வைத்து ஓட்டுகிறாயா என ஆய்வாளர் பூமாதேவி கோபப்பட அய்யோ இல்லீங்க ஆவணங்கள் வீட்டில் இருக்கிறது என்று கண்ணன் தெரிவித்துள்ளார்.

கண்ணனின் இரு சக்கர வாகனத்தை ஆய்வாளர் பூமாதேவி பறிமுதல் செய்து ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தார். உரிய ஆவணங்களை காட்டி விட்டு வாகனத்தை எடுத்துச் செல்லும்படி பூமாதேவி அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.

கண்ணன் மறுநாள் காலை அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வாளர் பூமாதேவியிடம் காட்டியிருக்கிறார். ஆவணங்களை சரிபார்த்த ஆய்வாளர் அனைத்தும் சரியாக இருந்தும் வாகனத்தை விடுவிக்கவில்லை.

மேடம் ரெக்கார்ட்ஸ் காட்டிவிட்டேன் வண்டியை விடச்சொல்லுங்கள் என கண்ணன் கேட்க, உன் வண்டியை பாதுகாப்பாக ஸ்டேஷனுக்கு கொண்டுவந்து பாதுகாத்து நீ சாவகாசமாக ஆவணங்களை கொண்டு வந்து காட்டுவாய் நாங்க உடனே வண்டியை விட்டுவிட வேண்டுமா? என பூமாதேவி திருப்பி நக்கலாக கேட்டுள்ளார்.

நூறோ இருநூறோ வாங்காமல் விடமாட்டார்கள் என முடிவு செய்த கண்ணன் அதற்கும் தயாராக இருந்தபோது பூமாதேவி வைத்த டிமாண்ட் கண்ணனை தூக்கிவாரிப்போட்டது.  காவல் நிலையத்திற்கு ஒரு பிரிண்டர் வாங்கிக் கொடுத்து விட்டு வாகனத்தை எடுத்துச் செல்லும்படி பூமாதேவி கூறியுள்ளார்.

கண்ணன் மிரண்டுபோய் மேடம் என் வண்டியை விற்றால் 2 பிரிண்டர் வாங்கலாம் அவ்வளவுதான் மதிப்பு இதுக்குப்போய் இவ்வளவு பெரிய பொருளை வாங்கிக் கேட்கிறீர்களே என கேட்க  சரி ரூ.3000 கொடுத்துட்டு வண்டியை எடுத்துக்கொண்டுப்போ என ஆய்வாளர் பூமாதேவி தெரிவித்துள்ளார்.

இதற்குமேல் வாதம்செய்தால் வேறு எதுவும் கிடைக்கும் என முடிவு செய்த கண்ணன் பூமாதேவிக்கு பாடம் புகட்ட நினைத்தார். போலீஸ் ஸ்டேஷன் நோட்டீஸ்போர்டில் இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலக போன் நம்பரை குறித்துக்கொண்ட அவர், நாளை பணத்தை கொடுத்துவிட்டு வண்டியை எடுத்துச் செல்கிறேன் எனக் கூறி வெளியே வந்துள்ளார்.

வெளியே வந்த அவர் ஆய்வாளர் பூமாதேவி லஞ்சம் கேட்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். பூமாதேவியை பொறிவைத்து பிடிக்க நினைத்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், ரசாயனப்பொடி தடவப்பட்ட ரூ.3 ஆயிரம் பணத்தை கண்ணனிடம் கொடுத்து ஆய்வாளர் பூமாதேவியிடம் கொடுக்கச் சொன்னார்கள்.

பின்னர் காவல நிலையம் அருகே, உள்ளே, வெளியே என மறைந்து நின்று கொண்டார்கள். சொன்னப்படி கண்ணன் ரசாயனப்பொடி தடவப்பட்ட ரூபாய் நோட்டை ஆய்வாளர் பூமாதேவியிடம் கொடுக்க அவர் அதை வாங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் பூமாதேவியை கையுங்களவுமாக பணத்துடன் பிடித்தனர்.

அதைத் தொடர்ந்து பூமாதேவியை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையிலான அதிகாரிகள் கைது செய்தனர். மேலும்  பூமாதேவியின் அலுவலகம் மற்றும் அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர்.

சென்னையில் காவல் நிலையத்தில் வாகனத்தை விடுவிக்க ரூ.3000 லஞ்சம் வாங்கிய பெண் ஆய்வாளர் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close