[X] Close

பொறியியலை நன்றாகப் படித்தால் வெற்றி பெறலாம்; ‘உயர்வுக்கு உயர் கல்வி' வழிகாட்டு நிகழ்ச்சியில் ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு அறிவுரை


  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 10:00 am
  • அ+ அ-

நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்து, பொறியியலை நன்றாகப் படித்தால் வெற்றி பெற முடியும் என்று ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு தெரிவித்தார்.

‘இந்து தமிழ் திசை' நாளிதழுடன் சாய்ராம் இன்ஸ்டிடியூசன்ஸ், தொழில்நுட்ப கல்வி இயக்ககம், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியன இணைந்து பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான ‘உயர்வுக்கு உயர் கல்வி' என்ற வழிகாட்டு நிகழ்ச்சியை திருச்சியில் ஹோட்டல் சம்பத்தில் நேற்று நடத்தின.

இந்த நிகழ்ச்சியில் ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு பேசியது:சுதந்திர இந்தியாவில் வெண்மைப் புரட்சி, பசுமைப் புரட்சி, ரயில் புரட்சி, தொலைத்தொடர்பு புரட்சி, ஏவுகணைத் தொழில்நுட்பத் திட்டம், விண்வெளி புரட்சி ஆகிய புரட்சிகளுக்கு பொறியாளர்களே காரணமாக இருந்துள்ளனர். பொறியியல் துறையில் இன்றும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

நாட்டில் தற்போது தண்ணீர் புரட்சி தேவைப்படுகிறது. கடல் நீரை எப்படி குடிநீராக்குவது, மழைநீரை எப்படிச் சேமிப்பது, காற்றிலிருந்து எப்படி நீரைப் பெறுவது, நீர் மேலாண்மை ஆகியவற்றை பொறியாளர்கள் கனவுத் திட்டமாக எடுத்துக் கொண்டு படிக்க வேண்டும்.

கடைசி இந்தியனுக்கும் இலவச மருத்துவ உதவி கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கு இசிஇ, மெக்கட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், கணினி அறிவியல் ஆகிய துறைகளின் வல்லுநர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். அதற்கான ஒரு பொறி, இளைஞர்களிடமிருந்து வெளிப்பட வேண்டும்.

நாம் விண்வெளியில் சாதனை செய்து கொண்டிருக்கும் நிலையில், இன்றும் நாட்டில் பல திறந்தவெளி கழிப்பிடங்கள் உள்ளன. எனவே, நாட்டில் சுகாதாரப் புரட்சியும் தேவைப்படுகிறது. கெமிக்கல், சிவில், மெக்கானிக்கல் இன்ஜினீயர் கள் ஆகியோர் இணைந்து கடைக்கோடி கிராமத்துக்கும் மிகக் குறைந்த செலவில் கழிப்பறை வசதியை உருவாக்க வேண்டும்.

இசிஇ, மெக்கானிக்கல், சிவில், எலெக்ட்ரிக்கல், கெமிக்கல் என பலதரப்பட்ட பொறியியல் துறைகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. பொறியியலைப் படிப்பது பாதுகாப்பானது. ஆனால், மனதுக்கு நெருக்கமான பொறியியல் பிரிவைத் தேர்வு செய்து படிப்பது அவசியம்.

4 ஆண்டுகள் கடுமையாக உழைத்து, பொறியியலை நன்றாகப் படித்தால் வெற்றி பெற முடியும். அப்படி படித்துதான் நான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். இன்னும் 2 ஆண்டுகளில் இந்தியா சொந்தமாக விமான இன்ஜினை தயாரித்துள்ளது என்ற சாதனையைப் பார்ப்பீர்கள். அதில், எனது பங்கும் மிக அதிகமாக இருக்கும் என்றார்.

தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் பங்கேற்ற கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் டி.ஆழ்வார்சாமி, இணையதளம் மூலம் விருப்பப் பாடப் பிரிவைப் பதிவு செய்வது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விளக்கினார். மேலும், மாணவர்களின் சந்தேகங் களுக்கும், கேள்விகளுக்கும் விளக்கமளித்தார்.

கல்வியாளர் ஸ்ரீராம் பேசும்போது, ‘‘பாடத்தைத் தாண்டி தொழில்நுட்ப மாற்றத்துக்கேற்ற திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்’’ என்றார். மேலும், பொறியியலில் அதிகம் பேரால் தேர்வு செய்யப்படும் பாடப் பிரிவுகள் குறித்தும், பொறியியல் பிரிவுகளில் கிடைக்கும் பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்தும் விளக்கினார்.

பேச்சாளர் சுமதிஸ்ரீ9 பேசும் போது, “மாணவர்கள் தாழ்வு மனப்பான்மை, பயம், கூச்சம் ஆகியவற்றை தூக்கி யெறிந்துவிட்டு எடுத்த காரியத்தை செய்து முடிக்க வேண்டும். ஏளனம், அவமானத்தைப் பொருட் படுத்தாமல், கிடைக்கும் சிறிய வாய்ப்பையும் பயன்படுத்தி தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்’’ என்றார்.

நிகழ்ச்சியில் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தைச் சேர்ந்த டாக்டர் பாலு, டாக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோரும் மாணவர்களுக்கு விளக்கங்களை அளித்தனர்.

‘இந்து தமிழ் திசை' முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி னார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close