[X] Close

விவசாயிகளை சமாதானம் செய்து 8 வழிச் சாலை திட்டம் அமைப்பது உறுதி: சேலம் மேம்பால திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி தகவல்


8

  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 09:28 am
  • அ+ அ-

‘விவசாயிகளை சமாதானம் செய்து, சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படுவது உறுதி’ என சேலத்தில் புதிய மேம்பாலம் திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் ஏவிஆர் ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு வரையிலான புதிய மேம்பால திறப்பு விழாவில் ஆட்சியர் ரோஹிணி தலைமை வகித்தார். இதில் திமுக எம்பி பார்த்திபன், அதிமுக எம்எல்ஏ-க்கள் செம்மலை, சக்திவேல், வெங்கடாசலம், மனோன்மணி, திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேம்பால திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

வளர்ந்து வரும் சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு, அடிக்கல் நாட்டிதிட்டத்தை தொடங்கி வைத்தார். ரூ.441 கோடி திட்ட மதிப்பிலான மேம்பாலம் ஏவிஆர் ரவுண்டானாவில் இருந்து ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு வரை ஒரு பிரிவாகவும், குரங்குச்சாவடியில் இருந்து அண்ணாபூங்கா வரை மற்றொரு பிரிவாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாநகரம் முழுவதும் மேம்பாலம் கட்டப்படுவதால், மக்கள் நெரிசல் இல்லாத பயணத்தை மேற்கொள்ள வழிவகை ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக, மகுடஞ்சாவடி, தாரமங்கலம், அரியானூர், மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேலம் - சென்னை வரையிலான எட்டு வழி விரைவுச்சாலை விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் வளர்ந்து வரும் தொழில்நகரங்களாக உள்ளதால், எட்டு வழிச் சாலை திட்டத்தால் சரக்கு போக்குவரத்து அதிகரித்து, தொழில் வளம் பெருகும். ஆண்டுதோறும் வாகன எண்ணிக்கைபெருகி வரும் நிலையில், விரைவுச்சாலை அவசியமாகியுள்ளது. தற்போது, 300 சதவீதம் வாகன எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நமக்கு சாலை வசதி மிகவும் அவசியமாகியுள்ளது.

உலக தரத்தில் சேலம் - சென்னை இடையே எட்டு வழிச் சாலை அமைப்பது மத்திய அரசின் திட்டமாகும். இது மாநில அரசின் திட்டம் அல்ல. நிலத்தை கையகப்படுத்தி அளிப்பது மட்டுமே மாநில அரசின் பணி. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், திட்டம் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

மாநில அரசு எட்டு வழிச் சாலை திட்டத்தை மக்களிடம் திணித்து, கட்டாயப்படுத்தி நிலத்தைப் பறித்து செயல்படுத்த விரும்பவில்லை. விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துதரப்பு மக்களையும் அழைத்து சமாதானமாக பேசி, அவர்கள் சம்மதத்துடன் எட்டு வழிச் சாலை திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் உள்கட்டமைப்பு மற்றும் சாலை வசதிகளில் தமிழகம் முதன்மைமாநிலமாக திகழ்கிறது.

அப்போதைய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சேலத்தில் ராணுவ தளவாட உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இதன் மூலம் இளைஞர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர். மத்திய, மாநில அரசுகள் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் அரசுகளாக விளங்கி வருகின்றன என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close