[X] Close

தம்பதியாகச் சென்று ஷோ ரூமில் விலை உயர்ந்த செல்போன் திருட்டு: சிசிடிவியால் சிக்கிய இளைஞர்


  • kamadenu
  • Posted: 07 Jun, 2019 18:46 pm
  • அ+ அ-

சென்னையில் மனைவியுடன் செல்போன் ஷோ ரூமுக்குச் சென்று செல்போன் வாங்குவது போன்று பாவனை செய்து, திருடிய இளைஞர் சிசிடிவி காட்சி மூலம் பிடிபட்டார்.

சென்னையில் முக்கியமான செல்போன் ஷோ ரூம்களில் விலை உயர்ந்த செல்போன் வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். இந்த ஷோ ரூம்களில் வாடிக்கையாளர்கள் போல இளம் தம்பதியர் செல்போன் வாங்கச் செல்வார்கள்.

படித்து, பெரிய நிறுவனத்தில் பணியாற்றுவதுபோன்று தோற்றத்துடன் இருக்கும் தம்பதியர் கேட்கும் மாடல்களை ஊழியர்கள் எடுத்துக் காட்டுவார்கள். அப்போது ஊழியர்கள் கவனத்தை திசை திருப்பி ஷோ கேஸ்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தம் புது செல்போன்களை கணவர் திருடிவிடுவார்.

இப்படியே பல ஷோ ரூம்களில் கணவர் கைவரிசை காட்டியுள்ளார். கோடம்பாக்கம், பாண்டி பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் செல்போன்கள் காணாமல் போவதை ஆராய்ந்த ஷோ ரூம் உரிமையாளர்கள் கண்காணிப்பு கேமராவை ஆராய்ந்தபோது டிப் டாப் உடையுடன் ஒரு நபர் செல்போன்களை, ஊழியர் கவனிக்கா வண்ணம் திருடுவதும், பக்கத்தில் அவர் மனைவி வேறு செல்போன்களை வாங்குவதுபோல் உள்ள காட்சிகளும் பதிவாகி இருந்தன.

இதையடுத்து அவர்கள் அளித்த புகாரைப் பெற்ற போலீஸார் வேறு சில ஷோ ரூம்களில் ஏற்கெனவே தகவல் கொடுத்து புகைப்படத்தையும் கொடுத்திருந்தனர். இந்நிலையில் அரும்பாக்கத்தில் உள்ள செல்போன் ஷோ ரூமில் அவர் வந்துள்ளார்.

இதுகுறித்து ஷோ ரூம் ஊழியர்கள் போலீஸாருக்குத் தகவல் சொல்ல அங்கு வந்த போலீஸார் அவரை செல்போனைத் திருடவிட்டு பின்னர் கையும் களவுமாகப் பிடித்தனர். அவரைப் பிடித்த போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் ஹாருண் (28) என்பதும் அரும்பாக்கத்தில் வசிப்பதும் தெரியவந்தது.

அவரிடமிருந்து 5 செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்தத் திருட்டில் ஹாருணின் மனைவிக்கு நேரடித் தொடர்பில்லை என்பதால் அவரை போலீஸார் கைது செய்யவில்லை.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close