[X] Close

‘எந்திரன்’ கதை திருட்டு புகாரில் கலாநிதி மாறன் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு


  • kamadenu
  • Posted: 07 Jun, 2019 08:33 am
  • அ+ அ-

‘எந்திரன்’ கதை திருட்டு தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதே நேரத்தில் படத்தின் இயக்குநர் ஷங்கர் மீதான காப்புரிமை சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா நடிப்பில் ஷங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படம் 2010-ல் வெளியானது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், சென்னை எழும்பூர் 13-வது மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், ‘1996-ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் தொடர் கதை எழுதினேன். என்னிடம் அனுமதி பெறாமல், அந்த கதையை இயக்குநர் ஷங்கர், ‘எந்திரன்’ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளார். இதனால் ஷங்கர், கலாநிதிமாறன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷங்கர், கலாநிதிமாறன் ஆகியோர் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதி பி.புகழேந்தி நேற்று பிறப்பித்த உத்தரவு:ஜூகிபா மற்றும் எந்திரன் கதையில் பல்வேறு ஒற்றுமை உள்ளது. இதனால் காப்புரிமை சட்டப்படி இயக்குநர் ஷங்கர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது. இதனால் அவர் மீதான காப்புரிமை சட்டப்பிரிவு வழக்கை ரத்து செய்ய முடியாது.

அதே நேரத்தில் அவர் மீதுஇபிகோ 420 பிரிவில் பதிவானவழக்கு ரத்து செய்யப்படுகிறது. இதனால் ஷங்கரின் மனு பகுதி அளவில் அனுமதிக்கப்படுகிறது.

கலாநிதிமாறன் படத்தின் தயாரிப்பாளர்தான். அவருக்கும் கதைக்கும் தொடர்பில்லை. இதனால் கலாநிதி மாறனின் மனு முழுமையாக ஏற்கப்பட்டு அவர் மீதான கதை திருட்டு வழக்கு ரத்து செய்யப்படுகிறது.

இயக்குநர் ஷங்கர் பிரபலமானவராக இருப்பதால், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது கூட்டம் கூடுவதற்கு வாய்ப்புள்ளது. இது நீதிமன்ற பணிகளை பாதிக்கச் செய்யும்.

இதனால் அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்படுகிறது. தேவைப்படும் போது நீதிமன்றம் உத்தரவிட்டால் ஷங்கர் ஆஜராக வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close