[X] Close

முகிலன் மாயமான வழக்கில் முக்கிய துப்பு கிடைத்துள்ளது: உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி அறிக்கை


  • kamadenu
  • Posted: 07 Jun, 2019 08:27 am
  • அ+ அ-

ஸ்டெர்லைட் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய சுற்றுச்சுழல் ஆர்வலர் முகிலன் திடீரென மாயமானார். அவரை மீட்டு ஆஜர்படுத்தக் கோரி ‘மக்கள் கண்காணிப்பகம்’ ஹென்றி டிபென் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். முகிலன் மாயமானது தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கியஅமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘ஸ்டெர்லைட் பிரச்சினையில் போலீஸாருக்கு எதிரான முக்கிய ஆவணங்களை வெளியிட்டதன் பின்னணியில்தான் முகிலன் மாயமாகியுள்ளார். அவர்மாயமாகி 100 நாட்களுக்கு மேலாகி விட்டது. அவருடைய நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, அவரை விரைவில் மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’’ என வாதிட்டார்.

இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் தரப்பில் முகிலன் வழக்கு விசாரணை தொடர்பான நிலைஅறிக்கை, சீலிடப்பட்ட கவரில் நீதிபதிகளிடம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அரசு தரப்பில், ‘‘இந்த வழக்கில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மாயமான முகிலன் குறித்து முக்கிய துப்புகிடைத்துள்ளது. அதை வெளியே பகிரங்கப்படுத்தினால் விசாரணை பாதிக்கப்படும். இந்தவழக்கில் இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை’’ என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து விசாரணையை 3 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close