[X] Close

மக்களவைத் தேர்தல் தோல்வி: மாவட்டச் செயலாளர்களுடன் ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆலோசனை


  • kamadenu
  • Posted: 03 Jun, 2019 15:11 pm
  • அ+ அ-

மாவட்டச் செயலாளர் ஆலோசனைக் கூட்டத்தை இன்று ஓபிஎஸ்- ஈபிஎஸ் கூட்டினர். இதில் மக்களவைத் தேர்தல் முடிவு, சட்டப்பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பேசப்பட்டதாகத் தெரிகிறது.

அதிமுக மக்களவைத் தேர்தலில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆட்சியின் மீது மக்களுக்கு பல்வேறு அதிருப்தி இருந்த நிலையில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது மேலும் அதிமுகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என விமர்சனம் வந்த நிலையில் தேர்தல் முடிவும் அவ்வாறாக அமைந்தது.

அதிமுக கூட்டணி போட்டியிட்ட 38 தொகுதிகளில் ஒரே ஒரு இடம் மட்டுமே அதிமுகவால் வெல்ல முடிந்தது. ஒரே திருப்தி ஆட்சி பறிபோகாமல் 9 சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பெற்றது. இதனால் அதிமுக ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. அமைச்சர் பதவியில் உள்ள ஓபிஎஸ் தவிர அனைவரும் அவரவர் சட்டப்பேரவை தொகுதியில் தங்கள் கட்சிக்கான வாக்கு வங்கியைக் குறைவாகப் பெற்றதும் விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் சட்டப்பேரவை விரைவில் கூட உள்ளது. இதையடுத்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் இல்லத்தில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது.

ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமையில் காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் பங்கு பெற்றனர். இந்தக்கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் தோல்வி, கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை, சட்டப்பேரவைக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் எதிர்கொள்வது, உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்துப் பேசப்பட்டதாகத் தெரிகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close