முன்விரோதம் காரணமாக அதிமுக பிரமுகரை நான்கு பேர் கொண்ட கூலிப்படைக் கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த பெருமட்டுநல்லூர் பகவதிபுரம், லட்சுமி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அதிமுகவில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக உள்ளார்.
இவர் ஏற்கெனவே காஞ்சிபுரத்தில் குடியிருந்தபோது கட்டுமான தொழில் செய்து வந்தார். அப்போது இவருக்கும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கலில் முன் விரோதம் இருந்துள்ளது. இதனால் காஞ்சிபுரத்திலிருந்து வெளியேறிய செந்தில்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெருமாட்டுநல்லூரில் வீடு கட்டி குடியேறியுள்ளார். மேலும் அப்பகுதியில் கட்டுமான தொழிலைத் தொடர்ந்து செய்து வந்தார்.
இந்நிலையில், இன்று காலை செந்தில்குமார் தனது இரண்டு குழந்தைகளையும் பைக்கில் அழைத்துக்கொண்டு நந்திவரத்தில் உள்ள எஸ்ஆர்எம் பள்ளியில் விட்டுவிட்டு மீண்டும் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
அப்போது, பெருமாட்டுநல்லூர் கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கே மறைந்திருந்த 4 பேர் கொண்ட கும்பல் செந்தில்குமாரை வழிமறித்து சரமாரியாக வெட்டியது. உடல் முழுவதும் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் அங்கேயே அவர் சரிந்து விழுந்துள்ளார். கூட்டம் கூடிய நிலையில் அங்கிருந்து அந்த மர்மக்கும்பல் தப்பியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீஸார், அவரை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
அப்பகுதியில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 4 பேர் கொண்ட கூலிப்படையினரை தேடி வருவதாக போலீஸார் கூறினர். இந்த சம்பவத்திற்குப் பின்னணியில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை உள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.