[X] Close

மக்களவைத் தேர்தலில் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் 2-ம் இடம் பிடித்த அமைச்சர்கள்: ஓபிஎஸ் தவிர அனைவரும் பின் தங்கினர்


2

  • kamadenu
  • Posted: 27 May, 2019 17:33 pm
  • அ+ அ-

-மு.அப்துல் முத்தலீஃப்

மக்களவைத் தேர்தல் முடிவில் அமைச்சர்களின் சட்டப்பேரவை தொகுதியில் திமுக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கையில் தமிழக அமைச்சர்கள் அனைவரும் பின் தங்கினர்.

நடந்து முடிந்த 17-வது மக்களவைக்கான தேர்தலில், வேலூர் தவிர 38 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 37 இடங்களைப் பெற்றது. சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் 13 தொகுதிகளை திமுகவும் 9 தொகுதிகளை அதிமுகவும் கைப்பற்றியது.

திமுக வென்ற மக்களவைத் தொகுதிகளுக்குட்பட்ட 9 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்கு வங்கியை அதிமுக கைப்பற்றிய அதிசய நிகழ்வும் நடந்தது. அதேபோன்று அதிமுக வென்ற தேனி மக்களவைத் தொகுதியில் அடங்கிய பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதியின் வாக்கு வங்கியை திமுக கைப்பற்றியது.

இதேபோன்று இந்தத் தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் திமுகவுக்கு சவால் விட்டு வேலை செய்தனர். தங்கள் ஆட்சிக்கான அங்கிகாரம் இந்தத் தேர்தல் என முழங்கினர். ஆனால் மக்களவைத் தேர்தல் முடிவில் 90 சதவீத தொகுதிகளில் திமுக வென்றது.

இந்தத் தேர்தலில் அமைச்சர்களின் தொகுதியில் அக்கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர். பலர் சொற்ப வாக்குவங்கியைக் கைப்பற்றுவதற்கு காரணமாக இருந்துள்ளனர்.

துணை முதல்வர் ஓபிஎஸ் மட்டுமே அவரது போடி நாயக்கனூர் தொகுதியில் திமுகவைவிட அதிக வாக்குகளை  அதிமுக பெறக் காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓபிஎஸ் தொகுதி தவிர அனைவரும் தங்கள் தொகுதியின் வாக்கு வங்கியைப் பெறுவதில் தோல்வி அடைந்தார்கள் என்று சொல்லும் அளவிற்கு வாக்கு வித்தியாசம் உள்ளது.

இந்தத் தேர்தலில் சூறாவளிப் பிரச்சாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மக்களவைத் தொகுதி திமுகவின் வசமானது. சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடி தொகுதியில் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வென்றார்.  தற்போது மக்களவைத் தேர்தலில் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுகவை விட, திமுக 8 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது.

இதேபோன்று இந்தத் தேர்தலில் அதிகம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இவரது தொகுதியான சிவகாசி விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குள் வருகிறது. இங்கு ராஜேந்திர பாலாஜி கடந்த முறை வென்றதைவிட மிகக்குறைவாக வாக்குகளை மக்களவைத் தேர்தலில் பெற்று இரண்டாம் இடத்தை அதிமுக பிடித்துள்ளது. மொத்த வாக்குகளில் திமுக கூட்டணி 80 ஆயிரத்து 863 வாக்குகளும் அதிமுக 43 ஆயிரத்து 158 வாக்குகளும் பெற்றுள்ளன. கிட்டத்தட்ட 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்.

இதேபோன்று சக்திமிக்க அமைச்சர்களான தங்கமணி அவரது தொகுதியான  ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம் சட்டப்பேரவை தொகுதியில்,  மக்களவைத் தேர்தலில் திமுக 86 ஆயிரத்து 683 வாக்குகளும், அதிமுக 65 ஆயிரத்து 323 வாக்குகளும் பெற்றுள்ளது. திமுகவை விட 21 ஆயிரத்து 360 வாக்குகளை அதிமுக குறைவாகப் பெற்றுள்ளது.

இதேபோன்று செல்வாக்கான அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தொண்டாமுத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக 96 ஆயிரத்து 218 வாக்குகளும், அதிமுக 75 ஆயிரத்து 127 வாக்குகளும் மக்களவைத் தேர்தலில் பெற்றுள்ளன. 21 ஆயிரத்து 91 வாக்குகளை திமுக கூடுதலாகப் பெற்றுள்ளது.

அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிட்டு வென்ற ராயபுரம் தொகுதி வடசென்னையில் வருகிறது. மக்களவைத் தேர்தலில் இங்கு அதிமுக  வாங்கிய மொத்த வாக்குகள் வெறும் 15 ஆயிரத்து 815 மட்டுமே. திமுக 69 ஆயிரத்து 987 வாக்குகளைப் பெற்றுள்ளது. இதன்மூலம் திமுக 54 ஆயிரத்து 172 வாக்குகளை கூடுதலாகப் பெற்றுள்ளது.

அமைச்சர் கே,பி.அன்பழகனின் பாலக்கோடு சட்டப்பேரவை தொகுதியில், மக்களவைத் தேர்தலில்  திமுக 97 ஆயிரத்து 927 வாக்குகள் பெற்றுள்ளது. அதிமுக கூட்டணிக்கு 75 ஆயிரத்து 523 வாக்குகள்  கிடைத்துள்ளன. 22 ஆயிரத்து 204 வாக்குகளை  கூடுதலாக திமுக பெற்றுள்ளது.

அமைச்சர் கே.சி.வீரமணியின் ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில், மக்களவைத் தேர்தலில் திமுக 98 ஆயிரத்து 248 வாக்குகளையும், அதிமுக 61 ஆயிரத்து 861 வாக்குகளையும் பெற்றது. 36 ஆயிரத்து 387 வாக்குகள் கூடுதலாக திமுகவுக்கு கிடைத்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் அமைச்சர் சரோஜா தேர்ந்தெடுக்கப்பட்ட ராசிபுரம் சட்டப்பேரவை தொகுதியில், 1 லட்சத்து 6 ஆயிரத்து 708 வாக்குகளை திமுக பெற்றுள்ளது. அதிமுக 96 ஆயிரத்து 269 வாக்குகளைப் பெற்றுள்ளது. திமுக 10 ஆயிரத்து 439 வாக்குகளை கூடுதலாகப் பெற்றுள்ளது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின்  கரூர் சட்டப்பேரவை தொகுதியில், மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 1 லட்சத்து, 11 ஆயிரத்து 333 வாக்குகளைப் பெற்றுள்ளது. அதிமுக 48 ஆயிரத்து 616 வாக்குளைப் பெற்றுள்ளது. 62 ஆயிரத்து 717 வாக்குகள் கூடுதலாக திமுக அணி பெற்றுள்ளது. 

சுகாதாரத்துறை அமைச்சரான சி.விஜயபாஸ்கரின் சொந்த தொகுதியான விராலிமலையில் மக்களவைத் தேர்தலில் திமுக 1 லட்சத்து 6 ஆயிரத்து 382 வாக்குகளையும், அதிமுக 40 ஆயிரத்து 104 வாக்குகளையும் பெற்றுள்ளது. இங்கு  66 ஆயிரத்து 278 வாக்குகள் திமுகவுக்கு கூடுதலாக கிடைத்துள்ளது.

அமைச்சர் வளர்மதி தொகுதியான ஸ்ரீரங்கத்தில் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 1 லட்சத்து 18 ஆயிரத்து 653 வாக்குகளைப் பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 50 ஆயிரத்து 128 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 68 ஆயிரத்து 525 வாக்குகள் திமுக கூட்டணிக்கு கூடுதலாக கிடைத்துள்ளது.

மதுரை மேற்கு தொகுதியில் வென்ற அமைச்சர் செல்லூர் ராஜுவின் தொகுதியில் மக்களவைத் தேர்தலில் திமுக 82 ஆயிரத்து 022 வாக்குகளையும், அதிமுக 55 ஆயிரத்து 208 வாக்குகளையும் பெற்றுள்ளது.

கஜா புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் தொகுதிக்குள் வரும் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் தொகுதியான வேதாரண்யத்தில் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 67 ஆயிரத்து 376 வாக்குகளையும், அதிமுக 48 ஆயிரத்து 948 வாக்குகளையும் பெற்றுள்ளது.

அதே மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அமைச்சர் காமராஜின்  நன்னிலம் தொகுதியில்  மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வாங்கிய வாக்குகள் 1 லட்சத்து 8 ஆயிரத்து 059. அதிமுக கூட்டணி வாங்கியதோ 62 ஆயிரத்து 051 மட்டுமே.

ஆனால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியான போடிநாயக்கனூரில் மக்களவைத் தேர்தலில் அதிமுக 94 ஆயிரத்து 279 வாக்குகளைப் பெற்றுள்ளது. திமுக கூட்டணி  67 ஆயிரத்து 791 வாக்குகளை பெற்று 2-ம் இடம் பெற்றுள்ளது. திமுக கூட்டணியைவிட 26 ஆயிரத்து 488 வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது. கூடுதல் வாக்குபெற்ற ஒரே அமைச்சர் ஓபிஎஸ் மட்டுமே.

அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார் மணிகண்டன், துரைக்கண்ணு, பாஸ்கர் உள்ளிட்ட அனைவருக்கும் இதே நிலைதான்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close