[X] Close

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள கமலுக்கு அழைப்பு


  • kamadenu
  • Posted: 27 May, 2019 14:30 pm
  • அ+ அ-

வருகிற 30-ம் தேதி நடைபெறவுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், நரேந்திர மோடி வருகிற 30-ம் தேதி (வியாழக்கிழமை) இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்கிறார். இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியை மிகப் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளது பாஜக.

கடந்த முறை பிரதமர் மோடி பதவியேற்றபோது, ஏராளமான சார்க் நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டனர்.  ஆனால், இந்த முறை உலக நாடுகளின் தலைவர்களையும் பதவியேற்பு விழாவுக்கு அழைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

இந்த விழாவில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நட்பு ரீதியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த விழாவில் ரஜினி கலந்து கொள்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கும், இந்த விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. காஞ்சிபுரம் மற்றும் பெரம்பலூரில் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட, மீதமுள்ள 37 தொகுதிகளில் போட்டியிட்டது. இவற்றில், திருவள்ளூர், வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய 12 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் மூன்றாமிடம் பெற்றது.

பதிவான மொத்த வாக்குகளில், 3.72 சதவீத வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close