[X] Close

கவலைப்படாதீர்கள்; நீங்கள் குஜராத்தில் பணியாற்றவில்லை: தமிழிசைக்கு அமித் ஷா ஆறுதல்


  • kamadenu
  • Posted: 27 May, 2019 14:32 pm
  • அ+ அ-

தோல்வி குறித்து கவலைப்பட வேண்டாம் என, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, தனக்கு ஆறுதல் தெரிவித்ததாக, அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைமையில் மாற்றம் வருகிறதா என்ற கேள்விக்கு, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பதிலளித்த தமிழிசை சவுந்தரராஜன், "என்னுடைய நோக்கம் தொலைநோக்குப் பார்வை. பாஜகவின் மாநிலத் தலைவராக நான் நிரந்தரமாக இருந்துவிட முடியாது. எப்படியும் நான் ஒரு பொறுப்பில் தான் இருப்பேன்.

பாஜகவைப் பொறுத்தவரை கூட்டுத் தலைமைதான். இந்தத் தோல்விக்கு நான் முழுப் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன். தமிழகத்திலுள்ள சூழல்கள், சவால்கள் என்னென்ன என்பது தேசியத் தலைவருக்குத் தெரியும். அந்த சவால்களை கடந்து நான் எப்படி பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தோல்விக்கு தமிழிசை மட்டும் காரணம் அல்ல என்பதும் அவர்களுக்குத் தெரியும். தோல்வியடைந்தவுடன் ஒருவரை தூக்கிப்போடும் நிலைமை எங்கள் கட்சியில் இல்லை.

இன்னும் சொல்லப்போனால், 'கவலைப்பட வேண்டாம், எல்லோருக்கும் சவால்கள் வரும். நீங்கள் குஜராத்திலோ, மத்தியப் பிரதேசத்திலோ பணியாற்றவில்லை. தமிழகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிற காலகட்டத்தில் சவால்களை எதிர்கொள்ளலாம்', என அமித் ஷா மிக ஆறுதலான வார்த்தைகளைக் கூறினார்.

அதேபோன்று, தேசிய பொதுச் செயலாளர் ராம்லால் தொடர்புகொண்டு, ''கடுமையாக உழைத்திருக்கிறீர்கள். எந்த விதத்திலும் மனத்தாங்கல் பெற்றுவிட வேண்டாம். அவநம்பிக்கை பெற்றுவிட வேண்டாம். இன்னும் பலமாக பணியாற்றுங்கள்'' என்று, ஆறுதலான வார்த்தைகளைக் கூறினார்.

கோப வார்த்தைகள் தலைமையிடமிருந்து நிச்சயமாக வரவில்லை. சமூக வலைதளங்களில் எது வேண்டுமானாலும் எழுதலாம். சமூக வலைதளப் பதிவுகளை நான் கடந்து சென்றுவிடுவேன்" என தமிழிசை தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close