[X] Close

காணி பழங்குடியின மக்கள் வசிக்கும் சின்ன மயிலாறில் முதல் முறையாக மின் இணைப்பு


  • kamadenu
  • Posted: 27 May, 2019 14:28 pm
  • அ+ அ-

-அசோக் குமார்

திருநெல்வேலி மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட முண்டந்துறை வனச்சரகத்தில் சின்ன மயிலாறு, பெரிய மயிலாறு, இஞ்சிக்குழி, சேர்வலாறு ஆகிய இடங்களில் காணி பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் சின்ன மயிலாறு, பெரிய மயிலாறு, இஞ்சிக்குழி ஆகிய பகுதிகளில் காணியின மக்களின் குடியிருப்புகளுக்கு இதுவரை மின்சார வசதி வழங்கப்படாமல் இருந்தது.

பெரிய மயிலாறு, இஞ்சிக்குழி ஆகிய பகுதிகள் பாபநாசம் அணைக்கு மேல் அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால், அங்கு மின் இணைப்பு கொடுக்க முடியாத நிலை உள்ளது. ஆனால், சின்ன மயிலாறு பாபநாசம் அணை அருகில் அமைந்துள்ளது.

இங்கு, சுமார் 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 30-க்கும் அதிகமானோர் பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள், தங்கள் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், காப்புக் காடு பகுதி என்பதால் வனத்துறையினர் மின் இணைப்பு கொடுக்க அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், காணியின மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, மின் இணைப்பு கொடுக்க அனுமதி அளித்தனர். அத்துடன், முழு நிதியுதவியையும் வனத்துறையினரே வழங்கினர். இதையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மின்வாரியத்தினர் சின்ன மயிலாறு பகுதிக்கு மின்சாரம் கொண்டு செல்வதற்காக, மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தப் பணிகள் முடிவடைந்து, 48 குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.

இதனால், காணியின மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்த வனத்துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு காணியின மக்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

மழைக்காலங்களில் ஆற்றைக் கடந்து செல்ல முடியாத நிலை இருப்பதால், சின்ன மயிலாறு ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்துத் தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close