[X] Close

தேனியில் பெற்ற வெற்றி மிகுந்த முக்கியம் வாய்ந்தது: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த இபிஎஸ்-ஓபிஎஸ்


  • kamadenu
  • Posted: 27 May, 2019 13:31 pm
  • அ+ அ-

தேனி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் பெற்றிருக்கும் வெற்றி மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக  என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட கூட்டறிக்கையில், "மக்களவை பொதுத் தேர்தலிலும், 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும், அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு தங்களது வாக்குகளை அளித்த, வாக்காளப் பெருமக்களுக்கு அதிமுகவின் சார்பில் நன்றி.

வாக்காளர்கள் மக்களாட்சியின் இதயம் போன்றவர்கள். "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்று எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா பலமுறை நமக்கு நினைவுபடுத்தி இருக்கின்றார்கள்.

நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலிலும், 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும், அதிமுக வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் பல கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை வழங்கி இருக்கின்றனர்.

குறிப்பாக, சோளிங்கர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், சூலூர், நிலக்கோட்டை, மானாமதுரை, சாத்தூர், பரமக்குடி, விளாத்திகுளம் ஆகிய 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில், வாக்காளர்கள் அளித்த மகத்தான வெற்றியின் காரணமாகவே, ஜெயலலிதா அமைத்த நல்லரசு நிலை பெற்றிருக்கிறது.

அதே போன்று, மக்களவையில் அதிமுகவின் குரல் ஒலிப்பதை உறுதி செய்திடும் வகையில், தேனி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் பெற்றிருக்கும் வெற்றி மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக அமைகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பன்னெடுங்காலமாக தங்கள் வீட்டுப் பிள்ளைகளாய் நேசிக்கும் தேனி மாவட்ட மக்கள் அதிமுகவுக்கு அளித்திருக்கும் வெற்றி மாலை, அதிமுகவுக்கு சூட்டப்பட்ட நன்றி மாலையாக அமைந்து, மத்தியில் அமைந்திருக்கும் புதிய அரசை ஆதரித்து வழிமொழியும் வாய்ப்பையும் வழங்கியிருப்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

வாக்காளர்கள், அதிமுகவுக்கு துரோகம் செய்தோரை புறந்தள்ளி, எம்.ஜி.ஆரால் நிறுவப்பட்டு போற்றி வளர்க்கப்பட்ட; ஜெயலலிதாவால் பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்ற, உண்மையான மக்கள் இயக்கம் அதிமுக தான் என்பதையும், மக்கள் மனதில் நிலைபெற்றிருப்பது "இரட்டை இலை" சின்னம் தான் என்பதையும் தங்கள் வாக்குகள் மூலம் உறுதி செய்திருக்கின்றார்கள்.

நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களையும்; சட்டப்பேரவை இடைத் தேர்தலில், தமிழக அரசையும், அதிமுகவையும், தங்கள் வாக்குகளால் கட்டிக் காத்திருக்கும் வாக்காளர்களையும் நேரடியாக சந்தித்து நன்றி கூற வேண்டியது, அதிமுகவினரின் இன்றியமையாத கடமையாகும்.

எனவே, தமிழகம் முழுவதும் ஜூன் மாதம் முதல் வாரம் தொடங்கி வாக்காளர்களுக்கு, கழக நிர்வாகிகளும், வேட்பாளர்களும், நேரடி சந்திப்புகள் வழியாகவும், பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் நன்றி தெரிவித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நமக்கு வாக்களித்தோர் மட்டுமல்லாமல், மற்றவர்களும் மனம் மகிழும் வண்ணம், கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் இன்னும் சிறப்புடன் மக்கள் பணியாற்றி, அனைவரது இதயங்களையும் வென்றெடுக்க நம் தொண்டு தொடர்ந்து நடைபெற வேண்டும்", என இபிஎஸ்-ஓபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close