அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் - அரியலூரில் காங்கிரஸ் கட்சியினர் கைது


அரியலூர்: காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை அவதூறாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை குறித்து அண்மையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடியாக செல்வப்பெருந்தகை பதில் தெரிவித்திருந்தார். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வார்த்தை மோதல் நிலவி வருகிறது. இதனால் இரு கட்சிகளின் தொண்டர்களும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் அண்ணாமலைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அண்ணாமலையின் உருவபொம்மை எரிப்பு, உருவப்படம் எரிப்பு, கிழிப்பு ஆகிய போராட்டங்களை காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அரியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர் காமராஜர் சிலை முன்பு நடைபெற்ற போராட்டத்தின் போது, அண்ணாமலையின் உருவபொம்மையை காங்கிரஸ் கட்சியினர் எரிக்க முயன்றனர். இதையடுத்து, போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி, உருவபொம்மையை பறிமுதல் செய்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் சங்கர் உட்பட 28 பேரை போலீஸார் கைது செய்தனர்.