[X] Close

செல்போன், வாகனத் திருட்டை கண்டறியும் ‘டிஜிகாப் செயலி': நெட்வொர்க் பிரச்சினையால் புறநகர் பகுதியில் பயன்படுத்துவதில் இடையூறு


  • kamadenu
  • Posted: 26 May, 2019 09:47 am
  • அ+ அ-

-த.சத்தியசீலன்

ஆண்ட்ராய்ட் செல்போன், வாகனத் திருட்டை கண்டறிய உதவும் 'டிஜிகாப் செயலி'யை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக காவல்துறை. நெட்வொர்க் பிரச்சினையால் கோவை புறநகர் பகுதிகளில் இச்செயலியை பயன் படுத்துவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை 'டிஜிகாப்' என்ற செயலி அறிமுகப்படுத்தி உள்ளது. பொதுமக்களின் வாகனம் மற்றும் ஆண்ட்ராய்ட் செல்போன்களை திருடி விற்கும் கள்ளச் சந்தையை ஒழிக்கும் நோக்கில் இச்செயலி உருவாக்கப் பட்டுள்ளது.நம்முடைய ஆண்ட்ராய்ட் செல்போன் திருடுபோனால், ஐஎம்இஐ எண்ணை இந்த செயலியில் பதிவு செய்து செல்போன் இருக்கும் இடத்தை தேட முடியும்.

காவல்துறையில் புகார் அளித்தால், அதை ஏற்றுக்கொண்டு அவர்கள் தொலைந்து போன செல்போனை டிராக் பண்ணுவார்கள்.

திருட்டு போனை கள்ளச்சந்தையில் விற்க முயன்றால், அது திருடப்பட்டதா? என்பதை இந்த செயலியின் மூலம் கண்டறிய முடியும். கடைகள் மற்றும் பிற நபர்களிடம் இருந்து பயன்படுத்திய செல் போனை வாங்குபவர்கள் அது திருடப் பட்டதா? என்பதையும் இந்த செயலியில் உறுதி செய்து கொள்ள முடியும்.

செயலியில் உள்ள ‘வெரிபை ஐஎம்இஐ' என்ற ஆப்ஷனை இயக்கி தெரிந்து கொள்ள முடியும். ஏற்கெனவே திருடப்பட்ட செல்போன்களை, போலீஸார் கைப்பற்றியிருந்தாலும், அதன் விவரம் இந்த செயலியில் தெரிந்துவிடும்.

ஆண்ட்ராய்ட் செல்போனை போலவே, வாகனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கிறது இந்த செயலி. ஆண்ட்ராய்ட் செல்போனில் பிளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, தங்களுடைய வாகன பதிவு எண், சி.சி.எண், இன்ஜின் எண் ஆகியவற்றை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதனால் வாகனங்களைத் திருடி கள்ளச் சந்தையில் விற்பதைத் தடுக்க முடியும். செயலியில் உள்ள ‘RECOVERED TWO WHEELER SEARCH' என்ற ஆப்ஷனில் இப்பணியை மேற் கொள்ள இயலும். அருகில் உள்ள காவல் நிலையங்களின் விவரம், அங்கு செல்வதற் கான வழித்தடத்தையும் வரைபடம் மூலமாக காண முடியும். அத்துடன் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களின் தொடர்பு எண்களையும் பெற முடியும். இந்த வசதிகளை ‘NEAR POLICE STATION', ‘KNOW YOUR POLICE STATION' ஆகிய ஆப்ஷன்கள் மூலமாக பெற முடியும். நாம் செல்லும் வழியில் போக்குவரத்து நெருக்கடி உள்ளதா? என்பதை ‘TRAFFIC ALERTS' என்ற பகுதியில் அறிந்து கொள்ள முடியும்.

இதேபோல் காவலன் எஸ்ஓஎஸ் செயலி முதியவர்கள், பெண்கள் பாதுகாப்புக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. இந்த செயலியை பதிவிறக்கி பெயர், பிறந்த தேதி, செல்போன் எண், மின்னஞ்சல் மற்றும் குடும்பத்தில் முக்கிய நபரின் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்த தகவல் காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றுவிடும்.ஆபத்தான தருணங்களில் இந்த செயலியில் உள்ள எஸ்ஓஎஸ் என்ற ஆப்ஷனை தொட்டால் காவல்துறைக்கு தகவல் சென்றுவிடும். அவர்கள் நம்முடைய இருப்பிடத்தை கூகுள் மேப் மூலமாகக் கண்டறிந்து உடனடியாக உதவுவர்.

போக்குவரத்து விதிமீறல் குறித்த புகார்களை பொதுமக்கள் காவல்துறைக்கு தெரிவிக்கும் வகையில், போலீஸ்-இ-ஐ (police-e-eye) என்ற செயலி கோவை மாநகரக் காவல்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இச்செயலியை பதிவிறக்கம் செய்து தங்கள் சுய விவரங்களை பதிவு செய்து கொண்டு, போக்குவரத்து விதிமுறை களை மீறும் வாகனங்களை புகைப்படம் எடுத்து, செயலி மூலமாக புகார் அளிக்கலாம். பதிவு எண்ணைக் கொண்டு சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரின் முகவரியைக் கண்டறிந்து, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காவல்துறையின் இந்த செயலிகளை பயன்படுத்துவதில் கோவை புறநகர் பகுதியில் நெட்வொர்க் பிரச்சினையால் பொதுமக்கள் பயன்படுத்துவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் கூறும்போது, ‘காவல்துறையின் செயலி களை மாவட்டம் முழுவதும் கொண்டு செல்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில இடங்களில் நிலவும் நெட்வொர்க் பிரச்சினையில் அங்குள்ள பொதுமக்கள் இச்செயலிகளை பயன்படுத்துவதில் இடர்பாடு உள்ளது. இது குறித்து மாவட்ட காவல்துறையின் தொழில்நுட்பக் குழு மூலமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாய்ப்பிருக்கும் பட்சத்தில் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அலுவலகம் வாயிலாக, அனைத்து பகுதிகளுக்கும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இச்செயலிகள் கொண்டு செல்லப்படும்' என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close