சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி: கனிமொழி மாலை அணிவித்து மரியாதை!


சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கனிமொழி எம்பி அமைச்சர் கீதாஜீவன் மற்றும் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 267-வது ஜெயந்தி விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளம் கிராமத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கனிமொழி எம்.பி., தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் மாவீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் செ.ராஜூ, ராஜலட்சுமி, மதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாநில சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர் விநாயகா ஜி.ரமேஷ், அமமுக சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் வீரன் அழகுமுத்து கோனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வீரன் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 4 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 17 துணை காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 1,600 போலீஸார் அழகுமுத்துக்கோன் மணிமண்டபம் அமைந்துள்ள கட்டாலங்குளம் கிராமம் மற்றும் கோவில்பட்டி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக சார்பில் மரியாதை செலுத்துவதற்காக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் காரில் வந்தனர். அப்போது பிரதான சாலையில் இருந்து மணிமண்டபத்துக்குப் பிரியும் சாலை வழியாக செல்ல 2 கார்களுக்கு மட்டுமே அனுமதி என போலீஸார் தெரிவித்தனர். நாங்கள் 4 கார்கள் செல்வதற்கு அனுமதி எழுதி கொடுத்து உள்ளோம் என அதிமுகவினர் தெரிவித்தனர். ஆனால் போலீஸார் மறுத்ததால் அவர்களுக்கிடையே சற்று நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கடம்பூர் ராஜூ உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் காரை விட்டு இறங்கி அங்கிருந்து நடந்தே மணி மண்டபத்துக்குச் சென்றனர்.