சென்னையில் குறுங்காட்டை அழித்து மேம்பாலம் கட்டுவதா? - கொதிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்


சென்னை: மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்காக 2,200 மரங்களை அழிக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை துறைமுகத்திலிருந்து கண்டெய்னர் சரக்கு லாரி போக்குவரத்தை விரைவுப்படுத்துவதற்காக, கடந்த 2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் மதுரவாயல் - துறைமுகம் இடையேயான பறக்கும் சாலை திட்டம் அறிவிக்கப்பட்டது. 15 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பணிகள் முற்றிலுமாக முடங்கியது. இந்தியாவிலேயே மிக நீளமான உயர்மட்ட சாலை திட்டமாக கருதப்பட்ட இந்த திட்டத்தை, 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு மீண்டும் துரிதப்படுத்தியது.

20.56 கிலோமீட்டர் நீளத்திற்கு 5,855 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பறக்கும் சாலை திட்டப் பணிகள் நடைபெற மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு சில நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்தது. மேலும் கடலோர மண்டல மேலாண்மை இதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே மதுரவாயல் மேம்பாலத்திற்கு அருகே 6.64 கோடி ரூபாய் செலவில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 2,200க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது பாலப்பணிகளுக்காக இங்குள்ள 2,200 மரங்களை வெட்ட இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிந்துரை வழங்கி உள்ளது.

இது தொடர்பாக சென்னை மாவட்ட பசுமை குழுவிடம் முன்மொழிவை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சமர்ப்பித்துள்ளது. இந்த முடிவுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னையில் பசுமை பரப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், குறுங்காடுகள் திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் இந்த மரங்களை வெட்டுவதால் சுற்றுச்சூழல் மேலும் பாதிக்கப்படும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இருப்பினும் இத்திட்டத்திற்கு மாவட்ட பசுமை குழு ஒப்புதல் வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.