[X] Close

மதச்சார்பின்மை, மக்களின் அடிப்படை உரிமை பாதுகாத்திட உழைப்போம்: திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்


  • kamadenu
  • Posted: 25 May, 2019 21:20 pm
  • அ+ அ-

‘மக்களே நம் எஜமானர்கள் - மக்களே நமது மகேசர்கள்’ என்பதை மறவாமல்  நாள்தோறும் மக்கள் பணி  ஆற்றிடுவோம் என திமுக எம்பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக எம்பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

“என்றும் மக்களுக்காகவே நாம்,  என்ற உறுதியுடன், நம் கடன் தொண்டூழியம் புரிவதே. சரித்திரச் சிறப்பு வாய்ந்த இந்த சாதனை  வெற்றியை வையகமே வியந்து போற்றுகிறது. மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்’ என்ற தனிப்பெரும் முழக்கத்தை முன்னிறுத்தி, திமுக தலைமையில் கூட்டணி அமைந்தது.

இந்த கூட்டணிக்கு தமிழகத்தில் பதிவான வாக்குகளில் 2 கோடியே 23 லட்சத்து 3 ஆயிரத்து 310 வாக்குகளை இந்தக்  கூட்டணிக்கு அளித்துள்ளது.

திசை திருப்ப முயன்றவர்களை செல்லுபடி இல்லாதவர்கள் என்றாக்கி, தந்தைபெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோர் போற்றி வளர்த்து, பண்படுத்தியது திராவிட மண்ணான இந்தச் செம்மொழித்  தமிழ்நாடு என்பதை அகில இந்திய அளவில் எவ்வித அய்யப்பாடும் இன்றி உணர்த்தியிருக்கும் தமிழக வாக்காளப்பெருமக்களின் உன்னதமான உரிமைப் போர் உலகத் தமிழர் ஒவ்வொருவரையும்பெருமிதம் கொள்ள வைக்கிறது.

ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு நினைவில் கொள்ளத்தக்கது. இந்த உணர்ச்சிமிகு, உயர்வான காட்சியைக் காணவும், வாழ்த்தி மேலும்  வழிகாட்டவும், கலைஞர் இல்லையே என்ற ஏக்கப் பெருமூச்சு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரின் இரத்த நாளங்களிலும் நிறைந்து  இருக்கிறது.

1971, 2004 நாடாளுமன்றத் தேர்தல்களில் தலைவர் ஈட்டித்தந்த மிகப்பெரிய வெற்றிகளுக்கு இணையான வெற்றியைப் பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம்  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டிடவும், நாட்டில் உண்மையான ஜனநாயகம் தழைத்தோங்கவும், சமூகநீதி மேம்படவும், சமத்துவம் போற்றப்படவும், மதச்சார்பின்மையைப்  பாதுகாத்திடவும்  அரசியல் சட்டம் அனைவருக்கும் அளித்துள்ள அடிப்படை உரிமைகளை அச்சமின்றிப்  பெற்றிடவும்,  திமுக தலைவரின் சீரிய வழிகாட்டுதலில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஆக்கபூர்வமான முறையில் அயராது பணியாற்றிடுவோம்.

அண்ணா வழியில் அயராது உழைப்போம்! ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தேதீருவோம்!  இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.  வன்முறை தவிர்த்து வறுமையை  வெல்வோம்! மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி!”  என்பதை இதயத்தில் ஏந்தி, அவற்றையே வழிகாட்டும் ஒளிவிளக்குகளாகக் கொண்டு இலட்சியப் பயணம் மேற்கொள்வோம்.

‘மக்களே நம் எஜமானர்கள் - மக்களே நமது மகேசர்கள்’ என்பதை மறவாமல்  நாள்தோறும் மக்கள் பணி  ஆற்றிடவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் உறுதியெடுத்துக் கொள்கிறது”

இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close