[X] Close

தமிழக தேர்தல் முடிவு: இளம் வாக்காளர்கள் எதை தீர்மானித்தார்கள்?  


  • kamadenu
  • Posted: 25 May, 2019 18:57 pm
  • அ+ அ-

-மு.அப்துல் முத்தலீஃப்

தமிழக அரசியல் களத்தில் அனைத்துக் கட்சிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போவது இளம் வாக்காளர்கள், மற்ற தேர்தல்களிலிருந்து இந்த தேர்தல் வித்யாசப்படுகிறது என்று கூறப்பட்ட நிலையில் இளம் வாக்காளர்கள் யாரை தீர்மானித்தார்கள்? ஒரு அலசல்.

1950-ம் ஆண்டுகளில் இந்தியா குடியரசு ஆன பின்பு நடந்த பொதுத்தேர்தலும் அதை ஒட்டிய தேர்தல்களிலும் வாக்காளர் மனநிலை தேசபக்தி என்கிற அளவிலும், உள்ளூர் பிரமுகர்கள், தனவந்தர்கள் என்கிற அளவிலும் இருந்தது.

மொழி, இனம், மதம், சாதி, கலை போன்றவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அரசியலில் வாக்குகளைப் பிரித்த வெற்றிகரமான அரசியல் தலைவர்கள் இந்தியா முழுவதும் இருந்தனர்.

இதில் மேற்கண்ட அம்சங்களில் இளம் வாக்காளர்களும் அதிகம் ஈர்க்கப்பட்டு வாக்களித்தனர். தமிழகத்தில் 1950-களில் காங்கிரஸ், முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் வாக்குகள் அதிகம். நீதிக்கட்சி, திராவிடர் கழகம் பின்னர் 1949-ம் ஆண்டு தி.க.விலிருந்து பிரிந்த திமுக என தமிழகத்துக்கான ஒரு அரசியல் அமைப்பாக திமுக தன்னை முன் நிறுத்தியது.

மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பின் திமுக சந்தித்த முதல் தேர்தலில் அக்கட்சி 15 இடங்களை வென்றது. 1962-ல் 50 இடங்களை திமுக வென்றது. அதன்பின்னர் எளிதில் பற்றிக்கொள்ளக்கூடிய இந்தி எதிர்ப்புக் கொள்கையை கையிலெடுத்தது திமுக.

அது அப்போதைய இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கூடவே கலைத்துறையினர் அரசியலுக்கு வரவு இளம் தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் இழுத்தது. விளைவு 1967-ல் திமுக ஆட்சியைப்பிடித்தது.

அதன்பின்னர் 1971-ல் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் இரண்டாக உடைய இந்திரா காங்கிரஸ், பழைய காங்கிரஸ் என பிரிய இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

அதற்கு காரணம் அப்போது இந்திரா கையிலெடுத்த வங்கி அரசுடைமை, நிலச் சீர்திருத்தம், பங்களாதேஷ் போர் போன்றவை இளைஞர்களை ஈர்த்தது. எம்ஜிஆர் பக்கம் இருந்த இளைஞர் பட்டாளம் ஒரு காரணம்.

1972-ல் எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டு அதிமுகவை தொடங்கினார். அப்போது இருபெரும் ஆளுமைகளின் பின்னால்தான் தமிழக வாக்காளர்கள் மனநிலை இருந்தது. எம்ஜிஆருக்கு கணிசமான பெண் வாக்காளர்கள் தீர்மானகரமான சக்தியாக இருந்தனர்.

1987-ல் எம்ஜிஆர் மறையும் வரை திமுக ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் வரும் பிரச்சினைகள் அதன் பின்னர் பல தேர்தல்களில் எதிரொலிக்கும்.

1960-களில் மொழிப் பிரச்சினையில் இளம் வாக்காளர்களைக் கவர்ந்த திமுக 1977-க்குப் பின் தொடர முடியவில்லை. காரணம் எம்ஜிஆர் எனும் சக்தி, பெண் வாக்காளர்களை அதிகம் ஈர்த்தது,  அதிமுக எனும் கட்சி அடுத்தடுத்த இளம் தலைவர்களைத் தலைமைக்குக் கொண்டு வந்ததால் உயிர்ப்புடன் இருந்தது.

இந்நிலையில் இடதுசாரிகள் 1980-களில் புதிய முயற்சியை மேற்கொண்டார்கள். இளைஞர், மாணவர் அமைப்பைத் தொடங்கினார்கள். இதைக் கண்ட திமுகவும் அதிமுகவும் இளைஞர்கள், மாணவர்கள் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பினார்கள்.

ஆனால் 1990 களுக்குப்பின் மாறி மாறி திமுக, அதிமுக ஊழல், ஆட்சியின் மேல் கொண்ட வெறுப்பு ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்தது. 90 களுக்குப்பின் கூட்டணிக்கட்சிகள் கணிசமாக வாக்கு வங்கிகளை வைத்து கூட்டணி மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.

1996-ம் ஆண்டு ரஜினி அலை, மக்களின் கோபாவேசம், காங்கிரஸ் பிளவு ஆட்சி மாற்றத்தை தீர்மானித்தது. இதே நிலை 2014 வரை தொடர்ந்தது. ஆனால் இதிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தார் ஜெயலலிதா. தனித்து நின்று கூட்டணி பலமில்லாமல் வெற்றிபெற்றார்.

2016 சட்டப்பேரவைத்தேர்தலில் கூட்டணி சேரவிடாமல் பார்த்துக்கொண்டார். இதன்மூலம் அணிகள் பிரிந்து மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தது. சாமர்த்தியமான சில நகர்த்தல்கள்மூலம் சம பலத்துடன் இருந்த திமுகவை ஓரங்கட்ட ஜெயலலிதாவால் முடிந்தது.

கருணாநிதி ஜெயலலிதா மறைவுக்குப்பின் புதிய தலைமையின்கீழ் இரண்டுக் கட்சிகளும் தேர்தலை சந்தித்தன. இம்முறை மீண்டும் கூட்டணி பலத்தை நம்பி கட்சிகள் இரு அணியாக நின்றன. மறுபுறம் அம்முக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளும் போட்டியிட்டன.

இம்முறை சமூக வலைதளங்கள் ஆதிக்கம் உள்ள தேர்தல் இது, பிரச்சார வடிவம் மாறி சமூக வலைதளங்கள் ஆதிக்கம்தான் கோலோச்சும் நிலையில் இவைகளே அனைத்தையும் தீர்மானித்தன. அரசியல் கட்சிகளும் இதில் தனி கவனம் செலுத்தின.

இளம் வாக்காளர்கள் புதிய வாக்காளர்கள் இந்தமுறை தீர்மானகரமான சக்தியாக இருந்தனர். மொத்த வாக்காளர்களில் 40 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள் 50 சதவீதம் வரை வாக்களித்தனர். தமிழக மொத்த வாக்காளர்களில் இவர்கள் 2 கோடியே 65 லட்சம்பேர் ஆவர்.

தற்போதுள்ள நிலையில் கூட்டணி பலம், பாரம்பரிய அரசியல் கட்சிகளின் பலத்தைத் தாண்டி இளைஞர்கள் முன்னுள்ள பிரச்சினைகள், அவர்களைப் பாதிக்கும் விஷயம் போன்றவற்றை வைத்து வாக்களிப்பார்கள் என அனைவரும் கணித்தனர்.

அப்படி எனில் அமமுக, மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சிகள் பெருவாரியான வாக்குகள் பெறலாம் என எதிப்பார்க்கப்பட்ட நிலையில் ஆளுங்கட்சிக்கு எதிரான மன நிலையில் அத்தனை வாக்குகளும் திமுக அணிக்கு அள்ளி குவிக்கப்பட்டுள்ளது.

இம்முறையும் வாக்குகள் சிதறாமல் ஒரு அணிக்கு சென்றுள்ளது. அதேப்போன்று மாநில ஆட்சி கலைய விரும்பவில்லை என்பதையும் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்களிப்பில் நிரூபித்துள்ளனர்.

இளம் வாக்காளர்களை பெரிதும் கவர்ந்திழுக்கும் சக்தி படைத்தவர்கள் என நினைத்த அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகள் பெருவாரியான வாக்குகளை அள்ள முடியவில்லை. இந்த முறையும் பிரச்சினைகள் அடிப்படையில் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அளிக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close