கொல்லிமலை அறப்பளீஸ்வரர்  கோயிலுக்கு ரூ.3 கோடியில் ராஜகோபுரம்!


கொல்லிமலையில், வல்வில் ஓரி மன்னரால் கட்டப்பட்ட அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு ரூ.3 கோடி மதிப்பில் 3 நிலை கொண்ட ராஜகோபுரம் கட்டப்பட உள்ளது. இதன் முதற்கட்ட பணியாக சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி குழுவினர் கோயில் வளாகத்தில் மண் பரிசோதனை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பிரசித்தி பெற்ற அறப்பளீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோயில் கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஓரி மன்னரால் கட்டப்பட்டது. இதுபோன்ற பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை கொண்டிருக்கும் அறப்பளீஸ்வரர் கோயிலின் முகப்புப் பகுதியில் ரூ. 3 கோடி மதிப்பில் 3 நிலையிலான ராஜகோபுரம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோயிலின் முன்புறம் ராஜகோபுரம் கட்டப்பட உள்ள இடத்தில் சேலம் கரூப்பூர் அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியர்களைக் கொண்ட குழுவினர் மண் பரிசோதனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கோயில் அதிகாரிகள் கூறுகையில், “கோயில் முகப்பில் 3 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் உபயதாரர்கள் மூலம் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. ராஜகோபுரத்தின் அடித்தளம் அமைப்பது தொடர்பாக தற்போது மண் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மண் பரிசோதனை முடிந்ததும் ராஜகோபுரம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். இதுபோல் ரூ.1.67 கோடி மதிப்பில் அன்னதானக் கூடம், நந்தவனம் மற்றும் முடித்திருத்தும் கூடம், கழிப்பறை வசதி உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. கோயில் நந்தவனத்தில் அந்தந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரக்கன்றுகளும் நடப்பட உள்ளது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பக்தர்களின் வசதிக்காக கோயில் முன்புறம் வாகன நிறுத்தும் வசதி செய்யப்பட உள்ளது. இதற்காக கோயில் எதிரே இருந்த பள்ளமானது பாறை, மண் கொட்டி சமதளப்படுத்தப்பட்டுள்ளது” என்றனர்.