புதுக்கோட்டை: 12 மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை; வீடு வீடாக சுகாதார பணியாளர்கள் ஆய்வு!


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் கிராமத்தில் பள்ளி மாணவர்கள் 12 பேருக்கு அடுத்தடுத்து மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அந்த கிராமத்தில் சுகாதாரப் பணியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், வயலோகம் ஊராட்சிக்கு உட்பட்டது கீழத்தெரு. இப்பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5 நாள்களில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 12 பேருக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நோய் பாதிப்புக்குள்ளான மாணவ, மாணவிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் வயலோகம் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்பகுதிக்கு விநியோகிக்கப்பட்ட குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே இப்பகுதியில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து வயலோகம் கீழத்தெரு பகுதியில் சுகாதாரத் துறையினர் மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றனர்.

இன்று 20 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், ஆஷா திட்ட பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு காய்ச்சல் அல்லது வேறு உடல்நலக் குறைவுகள் ஏதேனும் உள்ளதா என ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சிறுவன் இப்பகுதியில் உயிரிழந்து விட்டதாகவும், அதைத் தொடர்ந்து 12 மாணவர்கள் பாதிக்கப்பட்ட பிறகே அரசு சுகாதாரப் பணிகளை தொடங்கியுள்ளதாகவும், முன்கூட்டியே இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும் வயலோகம் கீழத்தெரு பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.