[X] Close

‘உனக்குத்தாம்பே போட்டேன்னாங்க; அப்புறம் ரெட்டையிலைதான உன் சின்னம்னு கேட்டாங்க’- அமமுக தோல்வி குறித்து மனம் திறந்தார் தங்கத்தமிழ்செல்வன்


  • kamadenu
  • Posted: 25 May, 2019 07:19 am
  • அ+ அ-

-கே.கே.மகேஷ்

அமமுகவின் நட்சத்திர வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் தேனி தொகுதியில், டெபாசிட் இழந்திருக்கிறார். தனது பரம வைரியான ஓபிஎஸ்சின் மகனிடம் தோற்ற அவரை பேட்டிக்காக தொடர்பு கொண்டேன். 'நெஞ்சமுண்டு நேர்மை யுண்டு ஓடு ராஜா' பாடல் காலர்டோனாக ஒலிக்க, போனை எடுத்துப் பேசினார் தங்கத்தமிழ்செல்வன். பேச்சில் வழக்க மான உற்சாகம், தெனாவெட்டு எல்லாம் இல்லை. ஆனாலும், நகைச்சுவை உணர் வோடு, கூலாக கேள்விகளை எதிர்கொண் டார் அவர்.

ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட இயக்கம் என்று நீங்கள் எல்லாம் சொன்ன அமமுக இப்படித் தோற்றிருக்கிறதே?

பிஜேபி, அண்ணா திமுக வரக் கூடாதுன்னு மக்கள் ஓட்டுப் போட்டிருக் காய்ங்க. எங்களை வெறுத்து ஓட்டுப் போடல. ஆனா, இதுல என்ன சந்தே கம்னா, தேனியில சில பூத்துல எங்களுக்கு வெறும் பூஜ்ஜியம் ஓட்டுலாம் விழுந் திருக்கு. பூத் கமிட்டிக்கே 13 பேர் போட்டி ருந்தோம். பூத் ஏஜெண்ட் 3 பேரு. அவங் களும், வீட்டுக்காரம்மாவும் போட்டிருந் தாலே 30 ஓட்டுக்கு மேல வந்திருக்கணும். இன்னும் பல பூத்துல சிங்கிள் டிஜிட் ஓட்டுலாம் விழுந்திருக்கு. ஏதோ பிராடு பண்ணியிருக்காங்கன்னு நினைக்கிறேன்.

சின்னம் குளறுபடியும் ஒரு காரணம்னு நினைக்கிறேன். முதல்ல இரட்டை இலை சின்னத்தைப் பறிச்சாங்க. அப்புறம் தாய்மார்கள் டெய்லி பயன்படுத்துற குக்கர் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கிடுச்சி. ஓட்டுப்போட்ட மக்கள்கிட்ட எல்லாம் கேட்டேன். உனக்குத்தாம்பா ஓட்டுப் போட்டேன்னு சத்தியம் பண் ணாத குறையாச் சொன்னாங்க. என்ன சின்னம்னு கேட்டேன், இரட்டை இலைக்குத்தாம்பேன்னு சொன்னாய்ங்க. இருபது வருஷமா அதுக்குத்தானப்பா நீ ஓட்டுக்கேட்டன்னு அப்பாவியா கேட்கிறாய்ங்க. கிராமத்து மக்கள்தான, பாவம் அறியாசனம் குழம்பிடுச்சி.

எடப்பாடி பழனிசாமி ஆளுமை மிக்க தலைவராக தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். இனிமேல் ஒருக் காலமும் அதிமுகவை தினகரனால் கைப்பற்றவே முடியாதுன்னு சொல் றாங்களே?

இதுதான் இந்தியாவுல கடைசி தேர்தலா, இன்னும் தேர்தல் இருக்குதுல்ல? அப்புறம் சசிகலாவும் ஒரு வழக்கு தொடர்ந்திருக்காங்க. ஆளுமைமிக்க தலைவர்னா என்னாத்துக்கு, எம்பி ஓட்டுக்கு ஆயிரம், எம்எல்ஏ ஓட்டுக்கு ரெண்டாயிரம் கொடுத்தாங்க?

அமமுகவும்தான் எல்லா தொகுதி யிலும் 200 ரூபாய் கொடுத்தார்களே?

அதுவந்து... அவ்வளவு காசு எல்லாம் நம்ம கொடுக்க முடியுமா என்ன? சும்மா பொய் சொல்றாங்க. பணமும் இல்லை, சின்னமும் இல்லை. பிறகெப்படி நாங்க ஜெயிக்க முடியும்?

ஸ்டாலினுடைய வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மோடிக்கு எதிரான அலையில அவ ருக்கு அதிர்ஷ்டம் அடிச்சிருக்குது. போன தடவை எப்படி 37 தொகுதியில அதிமுக ஜெயிச்சி எந்தப் பிரயோஜனமும் இல்லையோ, அதே மாதிரி இந்த தடவை திமுக கூட்டணி 38 தொகுதியில ஜெயிச்சதும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. டெல்லியில மிருக பலத்தோட பிஜேபி ஜெயிச்சி நிக்குது. 2014 நிலை மைதான், இப்பவும்.

அமமுக சார்பில் ராகுல் காந்தியோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. திமுக கூட்டணியில் தினகரன் இடம் பெற்றிருந்தால் இரண்டு, மூன்று எம்பி யாவது கிடைத்திருக்கும் என்று அரசி யல் பார்வையாளர் ரவீந்திரன் துரைசாமி சொல்லியிருக்கிறாரே?

இல்லைங்க. நாங்க யார் கூடேயும் கூட்டணி போட முயற்சி பண்ணல. அந்த மாதிரியான முயற்சியும் நடக்கவில்லை. நாங்கதான் தேசிய கட்சியோடு கூட்டணி கிடையாதுன்னு முதல்லேயே அறிவிச்சிட்டோமே.

ஓபிஎஸ்ஸை துரோகி, அடிமை, செயல் திறனற்றவர் என்று கடுமையாக விமர்சித்தீர்கள். ஆனால், இவ்வளவு பெரிய அலையிலும்கூட தன் மகனை ஜெயிக்க வைத்து, அதிமுகவின் மானத் தைக் காப்பாற்றியிருக்கிறாரே?

அவர் அதிமுகவின் மானத்தைக் காப்பாற்றல்ல. அசிங்கப்படுத்தியிருக் கிறாரு. அதிமுக தனிச்சிப் போட்டியிட்டி ருந்தாலாவது கவுரவமாகத் தோற்றி ருக்கும். அதைக்கொண்டுபோய் பாஜக வோடு கோர்த்துவிட்டு, அசிங்கப்படுத் திட்டாரு. தேனி தொகுதியில் மட்டும் பணத்தை பணம்னு பார்க்காம வாரி இறைச்சி ஜெயிச்சிட்டாப் போதுமா? உள்ளே வருகிற பெரியகுளம், ஆண்டிப் பட்டி ரெண்டு தொகுதியிலேயும் அதிமுகவை கரையேத்தலைல்ல? அதுவும் உங்க மாவட்டத்துலதான இருக்கு? அவங்க ரெண்டு பேரையும் தோற்கடிச்சிட்டு, உங்க மகனை மட்டும் காப்பாத்துனா அதுக்குப் பேரு அச்சீவ் மெண்ட்டா? சுயநலம்.

அத்தனை தொகுதியிலும் அமமுக டெபாசிட் இழந்திருக்கிறது. ஓசூரில் நோட்டாவுக்கும் கீழே போய்விட்டது. ‘அவருக்கு கட்சியிலும், மக்கள் மத்தி யிலும் செல்வாக்கே இல்லை. திமுகவில் அழகிரிக்கு எப்படி 10 பேரு அண்ணன் வாழ்க என்று சொல்கிறார்களோ, அதே போல அதிமுகவின் அழகிரி தினகரன்' என்று கேலி செய்கிறார்களே?

அதெல்லாம் மிதமிஞ்சிய கற்பனை. ஃபீனிக்ஸ் பறவைபோல மீண்டும் எழுவோம்னு எங்கள் பொதுச்செயலாளர் அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே.

‘தினகரன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கான தலைவராக சுருங்கிவிட்டார்' என்று தேர்தலுக்கு முன்பே விமர்சனம் எழுந் தது. தேர்தல் முடிவுகளும் முக்குலத்தோர் மக்கள் அதிகம் வாழும் பகுதியில் மட்டுமே அவர் ஒரு லட்சம் ஓட்டுகளை கடந்திருக்கிறார் என்று காட்டு கிறதே?

ஏங்க, முக்குலத்தோரின் கட்சி அமமுக என்றால் தேனி தொகுதியில நான் 5 லட்சம் ஓட்டு வாங்கி ஜெயிச்சிருக்கணும். பிரமலைக்கள்ளரே 5 லட்சம் பேர் இருக் காங்க. எல்லா சமூக மக்களும் எங்களுக்கு வாக்களிச்சிருக்காங்க. பாஜக, அதிமுகவை படுதோல்வியடையச் செய் யணும்னு மக்கள் முடிவு பண்ணியிருந் தாங்க. அதே நேரத்துல அமமுகவுக்கு ஓட்டுப்போட்டால் ஜெயிக்குமா? ஜெயிக் காதா என்ற சந்தேகம் வந்திருக்கலாம். அதனால பூராப்பேரும் ஒரே பக்கமா குத்திட்டாய்ங்கன்னு நினைக்கிறேன்.

தன்னம்பிக்கையாகப் பேசுவது வேறு. தெனாவெட்டாகப் பேசுவது வேறு. நீங்களும், தினகரன், புகழேந்தி, வெற்றி வேல் போன்றவர்களும் நாம் பேசிய முறை தவறு என்பதை இப்போதாவது உணர்கிறீர்களா?

மக்களிடம் நியாயத்தைக் கேட்டோம். நீங்கள் பேசியது நியாயம்தான்னு சொன் னாங்க. பிறகு பணம் வாங்குனதால, மனச்சாட்சி உறுத்தி மாத்தி ஓட்டுப் போட்டுட்டாங்க.

‘தினகரனை தவறாக வழிநடத்தி விட்டார் தங்கத்தமிழ்செல்வன். 22 தொகுதியிலும் நாமதான் ஜெயிக்கிறோம் என்று அவர் சொன்னதை தினகரன் நம்பிக் கெட்டுவிட்டார்' என்று சொல்கிறார் களே?

நான் சொல்றதை எல்லாம் அவர் அப்படியே கேட்க மாட்டாரு. 18 எம்எல்ஏ தகுதி நீக்க விஷயத்துல, அப்பீலுக்குப் போகாம அப்பவே தேர்தலைச் சந்திச் சிருந்தா அந்த 18ம் சுளையா எடுத்திருப் போம்னு நான் பகிரங்கமாகச் சொன்னேன். தாமதப்படுத்துனதுதான் எங்களுக்குப் பெரிய மைனஸ் ஆகிடுச்சி.

அதிமுகவை மீட்க முடியாமல் போ னால், அமமுகவில் சசிகலா இணை வாரா?

அவங்க ஜெயில்லேர்ந்து வெளியில வரணும். அதிமுக தொடர்பான வழக்கு முடியணும். அப்புறம்தான் அதைப் பற்றிப் பேசணும். இப்போதைக்கு அவங்க அதிமுக பொதுச்செயலாளராக இருந்தா லும், எங்க கட்சியிலும் அவைத் தலை வர் பதவியை அவருக்காக ஒதுக்கி வெச் சிருக்கோம்.

ஓபிஎஸ் தன் மகனுக்கு மத்திய அமைச் சர் பதவி கேட்பார் என்று சொல்லப்படுவது உண்மையா?

அவர் கேட்க மாட்டார். கேட்காமலேயே மோடி கொடுத்திடுவாரு. ஓபிஎஸ்க்காக ஸ்பெஷலா தேனிக்கே வந்து பிரச்சாரம் செஞ்சவரு அவரு. இந்தியாவிலேயே அவருக்குப் பிடிச்சவர்ன்னா அது ஓபிஎஸ் தான். அவரை வெச்சி தமிழ்நாட்ல கட்சியை வளர்க்கலாம்னு பார்க்காரு. ஒரு காலத்து லேயும் தமிழ்நாட்ல பிஜேபி வளராது.

ஓபிஎஸ் மீண்டும் முதல்வராவார்

தேனியில் நேற்று செய்தியாளர்களிடையே தங்கத்தமிழ்செல்வன் பேசியபோது, 'இந்தத் தேர்தல் மூலம் தமிழகத்தின் மூன்றாவது கட்சியாக அமமுக அடையாளம் காணப்பட்டிருக்கிறது. மோடியுடன் அதிமுக கூட்டணி வைத்து மோசம் போய்விட்டது. தமிழக முதல்வராக மீண்டும் பன்னீர்செல்வம் வருவார். பழனிசாமி வெளியேற்றப்படுவார். தமிழக மக்கள் பாஜகவுக்கு எதிர்ப்பு மனோநிலையில்தான் திமுக கூட்டணிக்கு ஓட்டு போட்டுள்ளனர். இது எங்களுக்கு எதிரான ஓட்டு அல்ல. இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் நடக்கக் கூடாதது எல்லாம் நடக்கும். மீனவர் பிரச்சினை, எட்டுவழிச் சாலை, நீட் தேர்வு என்று எதற்கும் தீர்வு ஏற்படாது' என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close