[X] Close

23 ஆண்டுகளுக்குப்பின் திமுக பெற்ற 100 எண்ணிக்கை


23-100

  • kamadenu
  • Posted: 24 May, 2019 16:48 pm
  • அ+ அ-

-மு.அப்துல் முத்தலீஃப்

1996-ம் ஆண்டுக்குப்பின் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை முதன்முறையாக 100-ஐ தாண்டியுள்ளது.

திமுக வெற்றியை பெரிய அளவில் முட்டுக்கட்டைப்போட்டு தடுத்ததில் ஜெயலலிதா, விஜயகாந்துக்கு பெரும் பங்குண்டு. கருணாநிதி தலைமையிலான திமுக பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துள்ளது.

1967-ல் முதன் முறையாக ஆட்சியைப்பிடித்த திமுக பின்னர் அண்ணா மறைவுக்குப்பின் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி தொடர்ந்தது. 1971-ம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் பிளவைப்பயன்படுத்தி இந்திரா காங்கிரஸுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தது.

அதில் திமுக கூட்டணி 205 தொகுதிகளையும், திமுக மட்டுமே 184 தொகுதிகளையும் கைப்பற்றியது. 1977-ல் எம்ஜிஆர் பிரிந்து அதிமுக தொடங்கிய பின்னர் சந்தித்த தேர்தலில் 48 இடங்களை மட்டும் பெற்று ஆட்சி சுருங்கி போனது.

1980-ம் ஆண்டு அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 37 இடங்களை மட்டுமே பெற்றது. 1984-ல் இந்திரா மறைவு எம்ஜிஆர் உடல் நல பாதிப்பு விவகாரத்தில் அதிமுக அமோக வெற்றியைப் பெற்றது. திமுக பெற்றது 22 இடங்கள் மட்டுமே.

எம்ஜிஆர் மறைவுக்குப்பின் ஜா, ஜெ அணிகள் பிரிந்த நிலையில் 1989-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக 150 இடங்களை வென்றது. திமுக ஆட்சி கலைக்கப்பட்டு 1991-ம் ஆண்டு மக்களவையுடன் நடந்த சட்டமன்ற தேர்தலில் ராஜிவ் படுகொலை காரணமாக திமுக வீழ்த்தப்பட்டது. திமுக 2 தொகுதிகளை மட்டுமே வென்றது.

அதன் பின்னர் 1996-ல் ஜெயலலிதா ஆட்சியின்மேல் மக்கள் கொண்ட கோபத்தை திமுக அறுவடை செய்தது திமுக கூட்டணி 221 இடங்களை வென்றது. அதன்பின்னர் சட்டமன்ற தேர்தல்களில் பெரிய அளவிலான முடிவை மாற்றக்கூடிய சம்பவங்கள் நடக்கவில்லை.

2001-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக 31 இடங்களை மட்டுமே பெற்றது. அதன் பின்னர் திமுக 100 எம்.எல்.ஏக்கள் என்ற எண்ணிக்கையை பெற்றதே இல்லை. இதில் இடையில் 2006-ம் ஆண்டு 96 எம்.எல்.ஏக்களுடன் 5 ஆண்டு ஆட்சியை சாமர்த்தியமாக கூட்டணி பலத்துடன் நடத்திக்காட்டினார் கருணாநிதி.

அதன்பின்னர் 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை இழந்தது. திமுக வென்ற தொகுதிகள் 23 மட்டுமே, நடப்பு 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வென்ற தொகுதிகள் 89 மட்டுமே. ஆகவே 1996-க்குப்பின் 100 தொகுதிகளை திமுக எட்டவே இல்லை.

தற்போது 88 தொகுதிகள் உள்ள நிலையில் நேற்றைய 22 சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவில் 13 இடங்களை வென்றதன் மூலம் 101 இடங்களாக திமுக எண்ணிக்கை 23 ஆண்டுகளுக்குப்பிறகு உயர்ந்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close