கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியது சரியா? - துரை வைகோ பதில்


சென்னை: கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய விவகாரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு சென்றடைவதை தடுக்க விரும்பவில்லை என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவது சரியா என சில அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். இதேபோல் சமூக வலைதளங்களிலும் தமிழக அரசின் இழப்பீட்டுத் தொகை அறிவிப்பு குறித்து ஏராளமானோர் விமர்சனங்களையும் வெளியிட்டனர்.

கள்ளச்சாராய மரணங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி எம்.பி-யுமான துரை வைகோவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர் பதிலளித்ததாவது, “மதுவை புறக்கணிக்க வேண்டும் என மக்களிடம் மனதளவில் மாற்றம் வந்தால்தான் பூரண மதுவிலக்கை கொண்டுவர முடியும். மதுவிலக்கு உள்ள குஜராத்திலும் இன்றைக்கும் கள்ளச்சாராய மரணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது, அது போதாது.

அத்தகைய பாதிப்பை சந்தித்த குடும்பங்களுக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பெற்றோரை இழந்த குழந்தைகள் கல்லூரி படித்து முடிக்கும் வரை அவர்களின் கல்விச் செலவை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்கள், மிகவும் வறுமை நிலையில் உள்ளனர்.

கள்ளச்சாராயம் அருந்தியது தவறுதான். ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகளின் நிலைமையை நினைத்தால் இழப்பீடு வழங்கக் கூடாது என சொல்வதற்கு எனக்கு மனம் வரவில்லை" இவ்வாறு துரை வைகோ கூறினார்.