[X] Close

மண்ணிலே கலைவண்ணம் கண்டார்...


  • kamadenu
  • Posted: 24 May, 2019 10:33 am
  • அ+ அ-

-ஆர்.கிருஷ்ணகுமார்

ஆதிமனிதன் தோன்றியபோது இயற்கையோடு இணைந்தே இருந்தான். இலை, தழைகளை ஆடையாக உடுத்திக்கொண்டு, கனி, காய்கறிகளை அப்படியே உண்டுவந்தான். அடுத்தகட்டமாக உணவுக்காக தானியங்களை விளைவித்து, சமைக்கத் தொடங்கியபோது மண்பாண்டங்களைக் கண்டறிந்தான்.  மண்பாண்டங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தவரை, ஆரோக்கியத்துக்கு தீமை ஏற்படவில்லை. நவீனம் என்ற பெயரில்,  மனிதன் இயற்கையான வாழ்க்கை முறையிலிருந்து, செயற்கை உலகில்  பிரவேசித்த பின்னர்தான் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கின.

நவீன யுகத்தில் மனிதர்களால் புறக்கணிக்கப்பட்ட பொருள் மண்பாண்டம். உணவுப் பொருளின் நச்சுத்தன்மையை நீக்கும் அபூர்வ சக்தி மண்பாண்டத்துக்கு உண்டு என்பார்கள். தாத்தாக்கள் இன்னும் ஆரோக்கியமாக உலவிக்கொண்டிருக்க இந்த மண்பாண்டங்களே காரணம்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் மண்பாண்டக் கலை மிகவும் புராதானமான கலையாகும். அகழ்வாராய்ச்சிகளில் தோண்டியெடுக்கப்படும் முதுமக்கள் தாழி மண்ணால் செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மண் சார்ந்த தொழில்களில் ஈடுபடுவோரை மணிமேகலைக் காப்பியத்தில் ‘மண்ணீட்டாளர்’ என்று குறிப்பிட்டுள்ளனர். தமிழகத்தில் மண்ணாலான பாண்டங்கள், தெய்வஉருவங்கள், குதிரை உள்ளிட்ட பொம்மைகள் ஆகியவற்றை கலைத்திறனுடன் செய்யும் கைவினைஞர்களை குலாலர்கள் அல்லது  குயவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். மண் சார்ந்த தொழில்களே இவர்களது பூர்வீகமான  குலத் தொழிலாகும்.

அடுப்பு, மண் சட்டி, பானை, தானியங்களைப் பாதுகாக்கும் பாண்டங்கள், பொம்மைகள், தோண்டி, குடம், கலயம், விளக்கு, முகூர்த்தப் பானை, தாளப் பானை, கடம், பூத்தொட்டி, அகல் என எண்ணற்ற வகையிலான பொருட்களை, மிகுந்த கலைத்திறனுடன் உருவாக்கி வருகின்றனர்.ஏழைகளின் குளிர்சாதனப் பெட்டியான பானையில்

சேமித்துவைத்து, பருகும் தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பதுடன், உடலுக்கும்  ஆரோக்கியம் தரும். மண்பாண்டத்தில் சமைப்பதும், மண் பானைச் சோறும் மருத்துவத் தன்மை கொண்டவை.

இவைதவிர, தெய்வ உருவங்களை மண்ணால் செய்து வழிபடுவதும், தமிழகத்தில் தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கமாகும்.  சிறுதெய்வக் கோயில்களில் கம்பீரமாய் காட்சியளிக்கும் அய்யனார், மதுரைவீரன், முனியப்பன், மாரியம்மன், முத்தாலம்மன், காளியம்மன், பேச்சியம்மன் உருவங்களுடன், குதிரை, காளை, யானை வாகனங்களும் நேர்த்தியாக மண்ணால் உருவாக்குகின்றனர்.

எவர்சில்வர் பாத்திரங்களின் வருகைக்கு முன்புவரை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்களே பெரும்பாலும் புழக்கத்தில் இருந்தன. மண்பாண்டங்களில் சமைத்து, அதில் இருப்பு வைத்து சாப்பிட்டிருந்தவர்களுக்கு நோய் தாக்குதல் மிகக் குறைவுதான்.

அதேபோல, பானைத் தண்ணீருக்கு ஈடு இணைகிடையாது. எவர்சில்வர், பிளாஸ்டிக்பொருட்களின் வருகையால் மண்பாண்டங்களைப் புறக்கணித்தது, களிமண்பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் உடைந்து சிதறிய பாத்திரம் போல மாறியது மண்பாண்டத்  தொழிலாளர்களின் நிலை.

சமீபத்தில் கோவை வந்திருந்த தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் (குலாலர்)   சங்கத்தின் தலைவரும், மண்பாண்டத் தொழிலாளர் நலவாரியத்தின் முன்னாள் தலைவருமான சேம.நாராயணனை  சந்தித்தோம். 76 வயதிலும் தமிழகமெங்கும் சுற்றி, மண்பாண்டத் தொழிலாளர்களின் நலனுக்காக குரல் கொடுத்து வருகிறார் இவர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இவரது பெற்றோர் சேம உடையார்-பாக்கியம். ஆறாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, மண்பாண்டத் தொழிலுக்கு வந்த இவர், 1973-ல்

இளங்கோ மன்றம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். 1980-ல் தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் (குலாலர்) சங்கத் தலைவராகப் பொறுப்பேற்றார். 1996 முதல் 2006 வரை சென்னை மாநகராட்சி கவுன்சிலராகவும், 2007 முதல் 5 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் நல வாரியத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

"மண் தோன்றிய காலம் முதல், நலம் பயக்கும்  உணவுகளை சமைக்கவும், சுகாதாரத்துடன் வாழவும், மண்ணாலான பாண்டங்களையும், வீடு கட்ட செங்கலையும், ஓடுகளையும், தெய்வச்சிலைகளையும் உருவாக்கி, மக்கள் நலன்களைப் பேணிக்காத்தவர்கள் மண்பாண்டத் தொழிலாளர்கள்.

திருநீலகண்டநாயனார்,  கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், மன்னர் சாலிவாகனன், வெண்ணிக் குயத்தியார், கம்பதாசன் என இக்குலத்தில் தோன்றிச் சிறப்படைந்தவர்கள் பலர்.

அக்காலத்தில் உணவுப் பொருட்களை சமைக்க முற்றிலும் மண்பாண்டங்களே பயன்பட்டன. அவை,  நச்சுத்தன்மையை நீக்கும் குணம் கொண்டவை என்பது அறிவியல் பூர்வமாகவே நிரூபிக்கப்பட்ட உண்மை. இதனால்,  மனிதர்களின் உடல் ஆரோக்கியத்துக்கும் பெரிதும் உதவின. ஆனால், தற்போது எவர்சில்வர், அலுமினியம், பிளாஸ்டிக் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். உடல் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகிவிட்டது. தமிழகத்தில் மண் மற்றும் காகித  பொம்மைகள், பானைகள், செங்கல் சூளை, அகல்விளக்கு தயாரிப்பு என சுமார் 40 லட்சம் பேர் இந்தத்  தொழிலில் ஈடுபட்டுவந்தனர். மண்பாண்டங்களின் பயன்பாடு குறைந்தது, களிமண் பற்றாக்குறை போன்ற காரணங்களால் பலர் மண்பாண்டத் தொழிலுக்கு முழுக்குப்  போட்டுவிட்டு, கூலிவேலைக்குச் செல்லத் தொடங்கினர். இந்த நிலையைப் போக்க அரசு உதவ வேண்டும்.

கருணை காட்டுமா அரசு?

தற்போது களிமண் அள்ள அனுமதி பெறுவதற்குள் படாதபாடுபட வேண்டியுள்ளது. எனவே, மண்பாண்டங்கள் செய்ய களிமண் எடுக்க தாராளமாக அனுமதி வழங்க வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகள் அமைக்க வேண்டும். பாடப் புத்தகங்களில் மண்பாண்டத் தொழில் தொடர்பான பாடங்களை வைக்க வேண்டும்.  மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மழைக்கால பராமரிப்பு உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும். மண்பாண்டத் தொழிற்கூடங்கள் அமைக்க மானியம் வழங்க வேண்டும். மண்பாண்டங்கள் தயாரிக்க ‘சீலா வீல்’ (மின் சக்கரம்) வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தொகுப்பு வீடுகள் ஒதுக்க வேண்டும் என்றெல்லாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தற்போது பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,  அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக்குக்கு மாற்றுப் பொருளாக மண் கலயங்கள், குடுவை, ஜாடி  உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த உத்தரவிட வேண்டும். மண்பாண்டத் தொழிலாளர் நல வாரியத்துக்கு தேவையான நிதியை ஒதுக்கி, தொழிலாளர்களின் கேட்பு விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, உடனடியாக உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்பாண்டங்கள் பயன்பாடு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அரசு உதவி செய்தால், கலைநயம் மிக்க திருவுருவச் சிலைகள், மண்பாண்டங்கள் உள்ளிட்டவற்றைத் தயாரித்து, வெளிநாடு களுக்கு அனுப்பி, அந்நியச் செலவாணி ஈட்டலாம்.  இதுபோன்ற நடவடிக்கைகளே மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும்" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close