தமிழக மீனவர்கள் 13 பேர் கைது : இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!


வங்கக் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இருப்பினும் மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாக மாறி இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 40க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து இன்று அதிகாலை 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக ஆழ் கடல் பகுதிக்குச் சென்றனர். அப்போது மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து கைது செய்து, அவர்களின் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் உள்ள மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை கைது செய்து வருவதால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.