அதிமுக ஐடி விங் நிர்வாகி வீட்டில் சிபிசிஐடி சோதனை; எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் அதிரடி


கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பிரகாஷுக்கு, விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்திருந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் எப்போது வேண்டுமானாலும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவானது. எனவே தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால், அவர் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை தமிழ்நாடு மட்டுமின்றி வட மாநிலங்களிலும் சிபிசிஐடி போலீஸார், தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீஸார், அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் இன்று காலை முதல் கரூரில் உள்ள அதிமுக ஐடி விங்க் நிர்வாகி கவின் என்பவரது வீட்டில் சிபிசிஐடி போலீஸார் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கவின், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் நெருங்கிய ஆதரவாளர் என்று தெரியவந்ததை அடுத்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.