[X] Close

சேலம் மக்களவைத் தொகுதியை கைப்பற்றுவது யார்? - மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் இன்று வாக்கு எண்ணிக்கை


  • kamadenu
  • Posted: 23 May, 2019 06:54 am
  • அ+ அ-

சேலம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள், சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் இன்று எண்ணப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் சேலம் மேற்கு, தெற்கு, வடக்கு, வீரபாண்டி, ஓமலூர், எடப்பாடி ஆகிய 6 தொகுதிகளும் சேலம் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியிலும், சங்ககிரி சட்டப்பேரவை தொகுதி நாமக்கல் மக்களவைத் தொகுதியிலும், மேட்டூர் சட்டப்பேரவை தொகுதி, தருமபுரி மக்களவைத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளன.

சேலம் மக்களவைத் தொகுதியில் மொத்தமுள்ள 16,11,982 வாக்காளர்களில், 12,48,809 பேர் வாக்களித்துள்ளனர். இது 77.57 சதவீதமாகும். வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப் பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் உள்ளிட்ட இயந்திரங்கள் அனைத்தும் சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கையை அறிந்து கொள்வதற்காக வாக்கு எண்ணிக்கை மையம் அருகே திரளும் கட்சித் தொண்டர்களைக் கட்டுப்படுத்த பொறியியல் கல்லூரி வளாக நுழைவு வாயிலில், தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், கல்லூரி நுழைவு வாயிலில், மெட்டல் டிடெக்டர் பொருத்தப்பட்டு, வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் ஊழியர்கள்சோதனைக்கு பின்னர் அனுமதிக்கவும், அடையாள அட்டையுடன் வருபவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கட்டிடத்தின் நுழைவு வாயில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியில் சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர் தலைமையில், துணை ஆணையர்கள் தங்கதுரை, சியாமளா மற்றும் உதவி ஆணையர்கள், இன்ஸ்பெக்டர்கள் என 1,000 பேர் மற்றும் ஒரு கம்பெனி பட்டாலியன் போலீஸார் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள 6 தனித்தனி கட்டிடங்களில் 6 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்குகளும் தனித்தனியாக எண்ணப்பட உள்ளன. மேலும், 6 சட்டப்பேரவை தொகுதியிலும் பதிவான தபால் ஓட்டுகள், ஒரே கட்டிடத்துக்குள் கொண்டு வரப்பட்டு அங்கு எண்ணப்பட உள்ளது. இதனிடையே, வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ரோஹிணி நேற்று ஆய்வு செய்தார்.

அறைகளில் குளிர்சாதன வசதி

கத்தரி வெயில் சுட்டெரித்து வருவதால், வாக்கு எண்ணிக்கை மையங்களில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்குகளை எண்ண 14 மேசைகள் அமைக்கப்பட்டு, அதில் ஒரு சுற்றுக்கு 14 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வீதம் எண்ணப்படும். 20 முதல் 25 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதும், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியில் இருந்து குலுக்கல் முறையில் தலா 5 விவிபாட் இயந்திரங்கள் எடுக்கப்பட்டு, அவற்றில் உள்ள வாக்குகள் எண்ணி சரிபார்க்கப்படும். இந்த எண்ணிக்கை முடிவுற்ற பின்னரே, முடிவுகளை தேர்தல் நடத்தும் அலுவலர் வெளியிடுவார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close