[X] Close

கோவையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு: குறைபாடுள்ள வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன


  • kamadenu
  • Posted: 23 May, 2019 06:48 am
  • அ+ அ-

கோவையில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடந்தது. அப்போது, குறைபாடுள்ள வாகனங்களை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில், கோவை டாக்டர் பாலசுந்தரம் சாலையிலுள்ள பி.ஆர்.எஸ். மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமையில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:மாநகர எல்லையிலுள்ள கோவை மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியப் பகுதி ஆகிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட 1,172 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள காவல், கல்வி, போக்குவரத்து துறைகளின் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாகனத்திலும் வாகனத்தின் தினசரி குறிப்பு புத்தகம், முதலுதவி பெட்டி, தீயணைப்புக் கருவி, அவசர கால வழி மற்றும் இருக்கை வசதிகள் ஆகியவை சோதனையிடப்படுகின்றன. வாகனங்களில் பழுதுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், உடனடியாக அந்த வாகனம் திருப்பி அனுப்பப்படும். உரிய பழுதுகளை சரிசெய்து ஆய்வுக்குழுவிடம் சான்று பெற்ற பள்ளி வாகனங்கள் மட்டுமே, சாலையில் இயங்க அனுமதிக்கப்படும் என்றார்.

31-க்குள் அறிக்கை தாக்கல்போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஆய்வின்போது அவசர கால கதவு சரிவர வேலை செய்யாதது, முதலுதவி பெட்டியில் மருந்துகள் இல்லாதது, தீயணைப்புக் கருவியில் குறைபாடு உள்ளிட்ட காரணங்களுக்காக சில வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. அந்த வாகனங்கள், குறைபாடுகளை சரிசெய்து மீண்டும் சான்று பெற வேண்டும்.

அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்து, வரும் 31-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. எனவே, எஞ்சியுள்ள வாகனங்களுக்கு இனிவரும் நாட்களில் அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் சான்று அளிக்கப்படும்.

சாலையில் செல்லும்போது, சான்று பெற்ற வாகனம் எது என்பதை போக்குவரத்து ஆய்வாளர்கள் எளிதில் கண்டறியும் வகையில், மஞ்சள் நிற பின்புலத்தில் கருப்பு ‘டிக் மார்க்’ கொண்ட ஸ்டிக்கர் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்படுகிறது. மேலும், வாகனத்தின் குழந்தைகள் பயணிக்கின்றன என்பதை ஓட்டுநர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில், ஓட்டுநரின் இருக்கைக்கு முன் உள்ள முன்பக்க கண்ணாடியில் ‘சிரிக்கும் முகங்களை சிந்தையில் நிறுத்துவேன்!, பாதுகாப்பாக வாகனத்தை இயக்குவேன்!’ போன்ற வாசகங்கள் பொறித்த ஸ்டிக்கரை ஒட்டியுள்ளோம்” என்றனர். ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பாஸ்கரன், குமரவேலு, ராஜூ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close