[X] Close

நாளை காலை 8.30 மணிக்கு முதல் சுற்று முடிவு; மொபைல் ஆப் மூலமாக முடிவை அறியலாம்: சத்யபிரதா சாஹு பேட்டி


8-30

  • kamadenu
  • Posted: 22 May, 2019 15:33 pm
  • அ+ அ-

நாளை காலை 8 மணிக்கு தபால் வாக்குகள், மற்ற வாக்குகள் எண்ணப்பட்டு 8.30 மணிக்கு முதல் சுற்று முடிவு தெரிவிக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதாவது:

''45 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்குத் தொடங்கும். வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். 4,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தலைமைச் செயலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் அவ்வப்போது முடிவுகள் அறிவிக்கப்படும்.  ஒவ்வொரு தொகுதிக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கையைப் பார்வையிட 88 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஒப்புதலுக்குப் பின்னரே தேர்தல் அதிகாரி முடிவை அறிவிப்பார்.

அதிகபட்சமாக திருவள்ளூர் தொகுதியில் 34 சுற்றுகளும், குறைந்தபட்சம் மத்திய சென்னையில் 19 சுற்றுகளும் எண்ணப்பட உள்ளதால், வாக்கு எண்ணிக்கை முழுவதும் முடிவடையும் காலநேரத்தைக் கணக்கிட முடியாது.

ஒரு தொகுதியில் 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்போது, ஒரு சட்டப்பேரவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு அதன் அதிகாரிகள் அந்த மக்களவைத் தொகுதியின் தபால் வாக்குகளை எண்ணுவார்கள்.

மற்ற 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் உடன் நடக்கும், தபால் வாக்கு முடிந்த பின்னர் மீதமுள்ள அந்த ஒரு தொகுதியும் சேர்த்து எண்ணப்படும். 8.30 மணிக்கு முதல் சுற்று முடிவு அறிவிக்கப்படும்.

தேர்தல் கண்காணிப்பாளர்கள் 88 பேர் வந்துள்ளனர். அவர்கள் அந்தந்தப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபவார்கள். அவர்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் காலை 5 மணிக்கு ஒதுக்கப்படும்.

பாதுகாப்புப் பணிக்காக தமிழகம் முழுவதும் 31  ஆயிரம் போலீஸார் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு வழங்குவர். சென்னைக்கு மட்டும் 5,000 போலீஸார் என 36 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

19 சி.ஆர்.பி.எப் கம்பெனி, 1,520 துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். தமிழக சிறப்புக் காவலர்கள் 62 கம்பெனி என 4,960 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.  

இது தவிர இது தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான பாதுகாப்புக்காக தனியாக பாதுகாப்பில் இருப்பார்கள்.

மின்னணு இயந்திரங்களில் எண்ணப்பட்டபின்னரே ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை முடிவுகளை eci.gov.in  அல்லது elections.tn.gov.in  இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். VOTER HELPLINE மொபைல் ஆப் மூலமும் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது''.

இவ்வாறு சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close