[X] Close

நாளை வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்கிறது?- தேர்தல் அதிகாரிகள் விளக்கம்


  • kamadenu
  • Posted: 22 May, 2019 13:46 pm
  • அ+ அ-

நாளை காலைமுதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை நடக்கும் விதம் குறித்து தேர்தல் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

17-வது மக்களவைத் தேர்தல் நடந்து அதன் வாக்குகள் இந்தியா முழுவதும் நாளை எண்ணப்படுகிறது. தமிழகத்தில் வேலூர் தொகுதி தவிர 38 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறுகிறது?

தமிழகம் முழுவதும் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு வேட்பாளருக்கு 16 முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 15 ஆயிரத்து 904 பேர் வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அதற்கு முன்னரே வாக்கு எண்ணிக்கை அதிகாரிகள், முகவர்கள் உள்ளே அமரவைக்கப்படுவார்கள்.

ஒரு மையத்துக்கு 14 மேஜை, ஒரு மேஜைக்கு ஒரு வேட்பாளருக்கு ஒரு ஏஜெண்ட் என்கிற கணக்கில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். ஏஜெண்டுகள் காலை உள்ளே சென்றவுடன் வாக்கு எண்ணிக்கை முடியும்வரை வெளியே வர முடியாது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் அதற்கான அறிவிப்பு உடனடியாக வெளியிடப்படும்.

ஓட்டு எண்ணிக்கைக்கான ஒவ்வொரு மையத்திலும் கண்காணிப்பாளர், நுண் பார்வையாளர், வாக்கு எண்ணும் அலுவலர்கள் இருப்பார்கள். வேட்பாளர்களின் முகவர்களிடம் வாக்கு எண்ணும் இயந்திரங்களின் எண், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் எண் ஆகியவற்றைக் காட்டிய பிறகே ஓட்டு எண்ணிக்கை தொடங்கும்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை சரிபார்ப்பதற்காக இந்த முறை ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் சேர்த்து எண்ணுவதற்கு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

அந்த வகையில் ஒரு சட்டப்பேரவைக்கு 5 ஒப்புகைச் சீட்டு எந்திரம் (வி.வி.பி.ஏ.டி.) என்ற வகையில் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் (6 சட்டப்பேரவையை உள்ளடக்கிய தொகுதி என்றால்) 30 வி.வி.பி.ஏ.டி. இயந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் எண்ண வேண்டும்.

ஒவ்வொரு வி.வி.பி.ஏ.டி. இயந்திரத்துக்கும் எண் இருக்கும். குலுக்கல் முறையில் அதில் 5 இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு சீட்டுகள் எண்ணப்படும். இந்தத் தேர்வை வீடியோ படம் எடுப்பார்கள்.

இதனால் ஓட்டு எண்ணிக்கையில் காலதாமதம் ஆகலாம். வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள ஓட்டுகளை எண்ணிவிட்டு கடைசியில்தான் வி.வி.பி.ஏ.டி. இயந்திரத்தில் உள்ள சீட்டுகள் எண்ணப்படும்.

வாக்கு எண்ணிக்கையை ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்க வேண்டியதிருப்பதால், ஒவ்வொரு சுற்றின் இறுதியிலும் சற்று காலதாமதமாகவே அறிவிப்பு வெளியாகும். எனவே, தேர்தலின் உத்தேச முடிவை மதியத்துக்குப் பிறகுதான் அறிய முடியும். இறுதி முடிவைப் பெறுவதற்கு இரவு ஆகலாம் என்றே தெரிகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கே தொடங்க உள்ளது. 6 சட்டப்பேரவை தொகுகளில் ஒரு தொகுதிக்கான மேஜையில் அந்த மக்களவைக்கான தபால் வாக்குகள் அனைத்தும் மொத்தமாக எண்ணப்படும். மற்ற 5 தொகுதிகள் வாக்கு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் அதே நேரத்தில் எண்ணப்படும். அடுத்து அந்த ஒரு தொகுதிக்கான வாக்குகள் எண்ணப்படும்.

அடுத்த ரவுண்டுகள் வழக்கமாக அனைத்து தொகுதிகளும் எண்ணப்படும். ஒவ்வொரு ரவுண்டு எண்ணிக்கை முடிவிலும் முடிவுகள் அறிவிக்கப்படும். அதற்கென அங்கு அமைக்கப்பட்டுள்ள தகவல் மையம் மூலமும், ஒருங்கிணைந்த மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும் முடிவுகள் அறிவிக்கப்படும்.

சட்டப்பேரவை இடைத்தேர்தலைப் பொறுத்தவரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் முடிந்துவிடும். சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளில் தொகுதிக்கு 5 வி.வி.பி.ஏ.டி. ஒப்புகை சீட்டு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கிறது.

அதன்பிறகு வி.வி.பி.ஏ.டி. இயந்திரத்தில் (ஒப்புகைச் சீட்டு) உள்ள சீட்டுகளும் எண்ணி சரிபார்க்கப்படுவதால் முடிவுகள் வெளியாக காலதாமதம் ஏற்படும். ஒரு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் உள்ள வாக்குச் சீட்டுகளை எண்ண குறைந்தது 40 முதல் 50 நிமிடங்கள் வரை ஆகலாம்.

அதைவைத்துப் பார்க்கும்போது 4½ மணி முதல் 5 மணி நேரம் வரை ஆகும். எனவே, சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் இரவு 8 மணிக்குப் பிறகே முழுமையாக அதிகாரபூர்வமாக தெரிய வரும்.

வாக்கு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ணும்போது தடங்கல் ஏற்பட்டால் முதலில் அதிலுள்ள பேட்டரி மாற்றப்படும். அதன்பிறகும் பிரச்சினை இருந்தால் வி.வி.பி.ஏ.டி. ஒப்புகைச் சீட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

சென்னையில் உள்ள 3 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, வடசென்னை தொகுதிக்கு லயோலா கல்லூரியும்,  மத்திய சென்னை தொகுதிக்கு ராணி மேரி கல்லூரியும், தென் சென்னை தொகுதிக்கு அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 3 மையங்களில் நடைபெறும்.

தமிழகம் முழுவதும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் வாக்கு எண்ணிக்கைக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்புப் பணியில் துணை ராணுவ வீரர்களும் ஈடுபடுகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close