விக்கிரவாண்டி ‘சம்பவங்கள்’ முதல் முஸ்லிம் பெண்களுக்கும் ஜீவனாம்சம் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ‘சம்பவங்கள்’: அமைதியாக நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மொத்தமுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 031 வாக்காளர்களில், 99 ஆயிரத்து 944 பெண் வாக்காளர்கள் உட்பட 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மாலை 6 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் விநியோகித்து வாக்குப்பதிவு நடைபெற்றது. 6 மணிக்குப் பிறகு வாக்களிக்க வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

முன்னதாக, தொரவி கிராமத்தில் சாலையோரமாக பாமக நிர்வாகிகள் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் பாமக, வழக்கறிலுர் பாலு உள்ளிட்டோரை கலைந்துச் செல்ல கூறியதால் போலீஸாருக்கும் பாமகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ஏடிஎஸ்பி திருமால் பாமகவினரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

பனையபுரம் வாக்குச்சாவடியில் திமுகவினர் அமர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, அங்கு வந்த பாமவினர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டனர். பணபட்டுவாடா தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டால் திமுகவுக்கும் பாமகவுக்கும் மோதல் ஏற்படும் பதற்றமான சூழல் நிலவவே போலீஸார் இரு கட்சியினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதனிடையே, வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாமக வேட்பாளர் சி.அன்புமணி, “விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட விராட்டிகுப்பம் கே.வி.ஆர் நகரில் திமுகவினர் வாக்காளர்களுக்கு தலா ரூ.6000 அளித்துள்ளனர். இதேபோல தொகுதி முழுவதும் ரொக்கப் பணம், பரிசுப் பொருட்களைக் கொடுத்துள்ளனர். தேர்தல் ஆணையம் மவுனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளது. எது எப்படி இருந்தாலும் பாமக அமோக வெற்றி பெறும்” என்றார். அதேநேரம், செய்தியாளர்களிடம் பேசிய அன்னியூர் சிவா, “தமிழக முதல்வரின் மக்கள் நலத் திட்டங்களால் இத்தொகுதியில் திமுக மிகப் பெரிய வெற்றி பெறும்” என்றார்.

இத்தேர்தலில் போட்டியிடவில்லை என அதிமுக ஒதுங்கிக் கொண்ட நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு விவகாரம்: ஐகோர்ட் காட்டம்: ‘நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர்களின் விபரங்களை சிபிசிஐடி போலீஸாருக்கு தேசிய தேர்வு முகமை வழங்காதது ஏன்?’ என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், “வழக்குப் பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆகிறது. இந்தியாவிலேயே இல்லாத மாணவர் ஒருவருக்கு, மூன்று மாநிலங்களில் தேர்வு எழுதப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் திருமணமான மாணவிகளின் தாலியைக்கூட கழற்றச் சொல்லி சோதனை செய்கிறீர்கள்” என்று நீதிபதி காட்டமாக தெரிவித்தார்.

மானநஷ்ட வழக்கு: அண்ணாமலை விளக்கம்: “கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு நான் தான் காரணம் என்று கூறியுள்ள ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளேன். ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரியுள்ளேன். ஆர்.எஸ்.பாரதியிடம் இருந்து பெறப்படும் ஒரு கோடி ரூபாயைக் கொண்டு கள்ளக்குறிச்சியில் குடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான முகாம் அமைக்க செலவிடப்படும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு: பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் இன்று வெளியானது. இந்நிலையில், தகுதியான மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 22-ம் தேதி முதல் தொடங்குகிறது. பொது பிரிவினருக்கான தரவரிசை பட்டியலில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த தொசிதா லட்சுமி என்ற மாணவி முதலிடத்தைப் பிடித்துள்ளார். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராவினி என்ற மாணவி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் இபிஎஸ் உறுதி:“தமிழகத்தில் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். 2026 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை” என்று நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்ததாக தெரிகிறது.

பாலஸ்தீனர்கள் காசாவை விட்டு வெளியேற இஸ்ரேல் உத்தரவு: இஸ்ரேலிய ராணுவம் அனைத்து பாலஸ்தீன குடிமக்களையும் காசா நகரத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 52 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 208 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கான் யூனிஸில் இடம்பெயர்ந்த குடிமக்கள் வசிக்கும் பள்ளியின் மீது இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில், புதன்கிழமை இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

மும்பை சொகுசு கார் விபத்து - நடவடிக்கை என்னென்ன? பிஎம்டபிள்யூ கார் விபத்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியை சேர்ந்த ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷாவு மது அருந்திய மதுபான விடுதி புல்டோசரால் இடிக்கப்பட்டது. இதனிடையே, மிஹிர் ஷாவின் தந்தை ராஜேஷ் ஷாவை சிவசேனா துணைத் தலைவர் பதவியில் இருந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நீக்கியுள்ளார்.

பிரான்ஸை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின்: நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஸ்பெயின். இதன் மூலம் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. உலகக் கோப்பை அல்லது யூரோ கோப்பை போன்ற பிரதான கால்பந்து தொடரின் வரலாற்றில் இளம் வயதில் கோல் பதிவு செய்த வீரர் என்ற சாதனையை யாமல் தனது 16 வயதில் படைத்தது கவனம் ஈர்த்தது.

முஸ்லிம் பெண்களுக்கும் ஜீவனாம்சம்: உச்ச நீதிமன்றம்: மத வேறுபாடின்றி திருமணமான அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் குற்றவியல் நடைமுறைத் சட்டம் பிரிவு 125-ன் கீழ் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற முஸ்லிம் பெண்களுக்கு உரிமையுண்டு என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னம் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு, "சிஆர்பிசி பிரிவு 125 மனைவியின் ஜீவனாம்சம் குறித்த சட்டபூர்வ உரிமையை பேசுகிறது. இது முஸ்லிம் பெண்களையும் உள்ளடக்கியது" என்று தனித்தனியாக, அதேசமயம் ஒரே தீர்ப்பை வழங்கியது. இந்த அமர்வு தனது தீர்ப்பில், "ஜீவனாம்சம் என்பது தொண்டு இல்லை. அது திருமணமான பெண்களின் உரிமை. திருமணமான அனைத்துப் பெண்களுக்கும் இது பொருந்தும். இதற்கு மதம் ஒரு பொருட்டு இல்லை" என்று கூறியிருந்தது.

இந்திய பயிற்சியாளராக கம்பீர் பெருமிதம்: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதில் பெருமை கொள்வதாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “இந்தியா என் அடையாளம். தேசத்துக்காக சேவை செய்வது என் வாழ்நாளின் பாக்கியமாக கருதுகிறேன். மீண்டும் அணியில் இணைந்ததை கவுரவமாக கருதுகிறேன். என்ன இந்த முறை எனக்கு வேறு பொறுப்பு. ஆனால், எப்போதும் போல எனது இலக்கு ஒன்று தான். அது ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ள செய்வது. இந்திய அணி வீரர்கள் 140 கோடி இந்திய மக்களின் கனவுகளை தங்களது தோள்களில் சுமக்கின்றனர். அதனை மெய்ப்பிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று கூறியுள்ளார்.