“எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக இருக்க அண்ணாமலைதான் காரணம்” - ஜோதிமணி எம்.பி


கரூர்: “நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக இருக்க பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தான் காரணம்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு எம்.பி. நிதியில் இருந்து 3 சக்கர பெட்ரோல் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 10ம் தேதி) மாலை 4.45 மணிக்கு நடைபெற்றது.

இதில் பங்கேற்ற எம்.பி., செ.ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறியது, “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் நாகரிகமோ, முதிர்ச்சியோ கிடையாது. காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் உள்ளிட்ட எல்லோர் மீதும் சேற்றை அள்ளி வீசுவது மட்டுமே அவரது வேலை. மக்கள் பிரச்சினை பற்றி பேசுவது கிடையாது. காவல் துறையில் நேர்மையற்று இருந்த அண்ணாமலை பாஜகவில் சேர்ந்த பிறகு, அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ளது. வசூல் செய்வதற்காகவே ஒரு யாத்திரையை நடத்தினார்.

லூலூ மால் மாதிரி பல இடங்களில் ஒரு செங்கல் கூட வைக்க விடமாட்டேன் என்று சொல்லிவிட்டு, பின்னர் அவர் பேச்சில் பின் வாங்கியுள்ளார். கோவையில் லூலூ மால் கட்டி திறக்கப்பட்டு விட்டது. இதில் அண்ணாமலை கமிஷன் பெற்றுக்கொண்டு தான் அவரது பேச்சிலிருந்து பின் வாங்கினாரா இதற்கெல்லாம் அவர் பதில் சொல்வது கிடையாது.

கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கு சட்டபடியான குற்றச்சாட்டு. அவர் ரூ.100 கோடி அளவில் நில மோசடி செய்துள்ளார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக அவர் இருந்தப் போதே அரசு பேருந்துகளுக்கு சேஸ், ஒளிரும் ஸ்டிக்கர் மற்றும் உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் ரூ.2,000 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி உள்ளனர். மற்ற அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது உள்ள புகாரை விசாரிக்க தற்போது வரை அவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதன் பின்னணியில் இருப்பது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தான். நில மோசடி வழக்கில் கைதுக்கு பயந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதற்கும் காரணம் அண்ணாமலை தான்” என்றார்.