[X] Close

வாக்கு எண்ணிக்கை நடைமுறை என்ன?- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்


  • kamadenu
  • Posted: 21 May, 2019 19:48 pm
  • அ+ அ-

வாக்கு எண்ணிக்கை அன்று என்னென்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது என்பது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது அறிவிப்பு:

’’தமிழகம் முழுவதும் மொத்தம் 45 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு வேட்பாளருக்கு 16 முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

15 ஆயிரத்து 904 பேர் வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணும் மையத்திற்குள் கூராக உள்ள பொருட்கள் (பேனா) உள்ளே எடுத்துச் செல்ல அனுமதியில்லை. பேப்பர், பென்சில் மட்டுமே அனுமதிக்கப்படும். முகவர்களுக்குத் தேவையான அனைத்தும் 100 மீட்டர் சுற்றளவில் கிடைக்கும் அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதைத் தாண்டி வெளியில் செல்லும் முகவர்கள் மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். வாக்கு எண்ணிக்கை மையத்தினுள் தேர்தல் நடத்தும் அதிகாரி, பார்வையாளர் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட சில அதிகாரிகள் தவிர வேறு யாருக்கும் அலைபேசி பயன்படுத்த அனுமதியில்லை.

ஒவ்வொரு சுற்றுக்குப் பின்னும் முடிவுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 விவிபாட் இயந்திரங்கள் கடைசியாக எண்ணப்படும்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சில விவிபாட்கள் எண்ணப்படும். வாக்குப்பதிவு இயந்திரப் பழுது காரணமாக வாக்குகள் எண்ண முடியாத நிலை ஏற்பட்டால் அதற்கான விவிபாட் இயந்திரங்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அதற்கு  ஒரு மணி நேரம் முன்னரே அதிகாரிகள், முகவர்கள் என அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டு அவரவர் இடங்களில் அமரவைக்கப்படுவார்கள்.

ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் 6 சட்டப்பேரவை தொகுதி இருக்குமாயின் அந்த 6 தொகுதிகளுக்கான வாக்குகளும் ஒன்றாகச் சேர்த்து மொத்தமாக எண்ணப்படும்.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி குறித்து தமிழகம் உட்பட 10 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளோடு தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாளை ஆலோசனை நடத்துகிறார்.

காணொலிக் காட்சி மூலமாக நாளை காலை 11.30 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான அனைத்து தபால் வாக்குகளும் ஒன்றாகச் சேர்த்து மொத்தமாக எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை நாளான மே 23 அன்று டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும்''.

இவ்வாறு சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close