உதகை குதிரை பந்தய மைதானத்தை அரசு கையகப்படுத்தியது செல்லும்: உச்ச நீதிமன்றம் அதிரடி


உதகை குதிரை பந்தய மைதானத்தை தமிழக அரசு கையகப்படுத்தியது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது 1896-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் உதகையில் குதிரை பந்தய மைதானம் அமைக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த மைதானம் இருந்து வந்தது. 1978-ம் ஆண்டு மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் குத்தகை அடிப்படையில் இந்த மைதானத்தை பயன்படுத்தி வந்தது. 2001-ம் ஆண்டு முதல் குத்தகை பாக்கி செலுத்தாமல் தொடர்ந்து பந்தயங்களை மெட்ராஸ் ரேஸ் நடத்தி வந்தது.

882 கோடி ரூபாய் குத்தகை தொகை நிலுவை பாக்கி தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், 53 ஏக்கர் பரப்பளவு உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப் குதிரைப் பந்தய மைதானத்தை அரசு கையகப்படுத்தி சீல் வைக்க உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வருவாய்த் துறையினர் குதிரைப் பந்தய மைதானத்திற்கு சீல் வைத்து அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர். மேலும், இந்த நிலம் தோட்டக்கலைத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டு, அங்கு மிகப் பெரிய பூங்கா உருவாக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மெட்ராஸ் கிளப் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு குதிரை பந்தய மைதானத்தை கையகப்படுத்தியது செல்லும் எனக் கூறி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.