[X] Close

திமுகவை விட்டு காங்கிரஸ் விலகுவதாக விஷமிகள் பரப்பிய மோசடி அறிக்கை: டிஜிபியிடம் காங்கிரஸ் புகார்


  • kamadenu
  • Posted: 21 May, 2019 16:54 pm
  • அ+ அ-

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகுவதாக அக்கட்சியின் லெட்டர்பேடில் கே.எஸ்.அழகிரி அறிக்கை அனுப்பியதாக சமூக வலைதளங்களில் பரவ, அதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் எதிர்க்கட்சிகள் ஓரணியாக வலுவாக உள்ளன. முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கடந்த சட்டப்பேரவை தேர்தலிலிருந்தே திமுக கூட்டணியில் உள்ளது. திமுக -காங்கிரஸ் உறவு வலுவாக உள்ளது.

மக்களவைத் தேர்தல் தொடங்கும் முன்னரே திமுக தலைவர் கருணாநிதி சிலையை சோனியா காந்தியை வைத்து திறக்க வைத்த திமுக தலைவர் ஸ்டாலின் அடுத்த பிரதமருக்கான வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவித்தார். தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 10 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டது.

காங்கிரஸ் அரசு மத்தியில் அமைந்தால் அதில் திமுகவும் இடம்பெறும் என்கிற பேச்சு பரவலாக எழுந்த நிலையில் நேற்று மாலை முதல் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காங்கிரஸ் அறிக்கை ஒன்று அதன் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டதாக வெளியானது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

“திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறுகிறது. வரும் 23-ம் தேதிக்குப் பின் காங்கிரஸ், திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக சோனியா காந்தியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் காங்கிரஸ் தலைமையின் முடிவு, 23-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக்குப்ப பின் வெளியிடும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய அளவில் பெரிய கட்சியாக அமைக்க சந்திரசேகர ராவ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் இணைந்து பேசி வருவதால் கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளோம்'' என கே.எஸ்.அழகிரியின் கையெழுத்தும் போடப்பட்ட காங்கிரஸ் லெட்டர்பேட் மூலம் அனைவரிடமும் குழப்பம் ஏற்பட்டது.

இது தவறான தகவல். தொண்டர்களிடம் குழப்பம் ஏற்படுத்த விஷமிகள் இவ்வாறு போலியாக அறிக்கையைத் தயார் செய்து வெளியிட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் சட்டப்பிரிவு இணைத்தலைவர் ஷாநவாஸ் புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில் மேற்கண்ட போலி அறிக்கையில் உள்ள விவரங்களைத் தெரிவித்துள்ளனர்.

மேலும், புகாரில், ''இதேபோன்று எங்கள் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி குறித்தும், செய்தித் தொடர்பாளர் கோபண்ணா குறித்தும் தவறான தகவல்களை வாட்ஸ் அப்பில் பரவ விட்ட சிதம்பரத்தைச் சேர்ந்த விஜயசுந்தரம் என்பவர் மீது சிதம்பரம் காவல் நிலையத்திலும், பின்னர் சிதம்பரம் எஸ்.பி.யிடமும் அளித்துள்ளோம்.

இந்நிலையில் மீண்டும் பரபரப்பை, தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், கட்சித் தலைவரான அழகிரியின் பெயருக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் மோசடியாகத் தயாரிக்கப்பட்ட அறிக்கை சமூக வலைதளங்களில் பரவ விடப்பட்டுள்ளதற்கும் இதே விஜயசுந்தரம் காரணமாக இருக்கலாம் என நம்புகிறோம்.

இதுபோன்ற தகவலால் மோசமான விளைவுகள் எதுவும் நிகழ்வதற்கு முன் துரிதமாக இத்தகைய போலி அறிக்கையை பரப்பிய பின்னணியில் உள்ளவர்களைப் பிடித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close