[X] Close

ஹைட்ரோகார்பன் திட்டம்: தமிழகத்தை பாலைவனமாக்கத் துடிக்கும் மத்திய, மாநில அரசுகள்; தினகரன் கண்டனம்


  • kamadenu
  • Posted: 21 May, 2019 15:57 pm
  • அ+ அ-

மக்களைத் துச்சமாக நினைத்து ஆட்டம் போட்ட ஆட்சியாளர்களுக்கு சரித்திரத்தில் கிடைத்த தண்டனைகளை எதேச்சதிகாரிகள் மறந்துவிடக்கூடாது என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்திலும், அதையொட்டிய புதுச்சேரி ஒன்றியப் பகுதிகளிலும் ஹைட்ரோ கார்பன் வளம் குறித்து 32 இடங்களில் ஆய்வு நடத்த வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்திருக்கிறது.இதற்கு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தைப் பாலைவனமாக்குவதற்காக நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த துடிக்கும் மத்திய, மாநில ஆட்சியாளர்களைக் கண்டிக்கிறேன்.

விவசாயிகள், மீனவர்கள் என ஹைட்ரோகார்பனுக்கு எதிராகப் போராடும் அனைத்து தரப்பினருக்கும் அமமுக ஆதரவாக நிற்கும். புதுச்சேரியைப் போல, தமிழகத்திலும் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற எந்தத் திட்டத்திற்கும் அனுமதி இல்லை என்று முதல்வர் பழனிசாமி அரசு அறிவிக்க வேண்டும்.

மக்களைத் துச்சமாக நினைத்து ஆட்டம் போட்ட ஆட்சியாளர்களுக்கு சரித்திரத்தில் கிடைத்த தண்டனைகளை இந்த எதேச்சதிகாரிகள் மறந்துவிடக்கூடாது" என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close