[X] Close

''ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்கிறேன்; குடும்பத்தைப் பிரிவது வேதனை''- காணொலி பதிவிட்டு ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை


  • kamadenu
  • Posted: 21 May, 2019 15:36 pm
  • அ+ அ-

ரியல் எஸ்டேட் தொழிலில் கமிஷன், புதிய சட்டங்கள் நெருக்கடி காரணமாக தொழில் வீழ்ச்சியால் மனமுடைந்த மதுரவாயலைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை செய்துகொண்டார். சாகும்முன் காணொலியில் உருக்கமாகப் பேசி நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.

சென்னை போரூரை அடுத்த மதுரவாயல் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் சின்னராஜா (48). இவருக்கு ரீட்டா (46) என்ற மனைவியும் ஒரு மகளும், மகனும் உள்ளனர். ரியல் எஸ்டேட் தொழிலில் ஒரு காலத்தில் சின்னராஜா கொடிகட்டிப் பறந்தார்.ரியல் எஸ்டேட் சங்க மாநில நிர்வாகியாகவும் இருந்தார்.

சின்னராஜாவின் மகன் கடந்த 3 ஆண்டுகளுக்கு சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அவரது மகளுக்கு கடந்த ஆண்டு விமரிசையாகத் திருமணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பண மதிப்பிழப்பு, பத்திரப்பதிவுத் துறையில் கட்டுப்பாடு, அதிக அளவில் கமிஷன் கொடுக்க வேண்டிய நிலை, நிலங்களை வாங்கவும், விற்கவும் உள்ள கட்டுப்பாடு காரணமாக ரியல் எஸ்டேட் தொழில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார் சின்னராஜா. தொழிலில் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்த அவர் வாங்கிய கடன்காரர்களுக்குப் பதில் சொல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். தொடர்ந்து மானத்தோடு வாழ முடியாத நிலையில் நேற்று இரவு காணொலியில் மேற்கண்ட விஷயங்களைப் பதிவு செய்துவிட்டு தனது நண்பர்களுக்கு அதை அனுப்பி விட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

அவரது பதிவு நள்ளிரவு 1 மணி அளவில் நண்பர்களுக்கு வந்தது. அதைச் சிலர் பார்த்துள்ளனர். பெரும்பாலானோர் காலையில் பார்த்துள்ளனர். இரவே பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, தற்கொலை முடிவைக் கைவிடும்படி கேட்டு, அவரது எண்ணுக்கு அழைத்துள்ளனர்.

ஆனால், சின்னராஜா தன் செல்போனை அணைத்துவிட்டார். இதனால் மதுரவாயல் போலீஸுக்கும் மற்ற கன்ட்ரோல் ரூமுக்கும் தகவல் அளித்து முகவரியைக் கூறி விவரமாகத் தெரிவித்துள்ளனர். பின்னர் அனைவரும் சென்று அவரது மனைவிக்கு விவரத்தைச் சொல்லி கதவைத் திறக்கச் சொல்லியுள்ளனர்.

கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சின்னராஜா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்கு அனுமதிக்க, 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் வந்ததும், சிகிச்சைக்காக அவரைச் சோதித்தபோது சின்னராஜா ஏற்கெனவே இறந்து விட்டது தெரியவந்தது.

இதையடுத்து சின்னராஜா உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கு முன்பு வீடியோவில் சின்னராஜா உருக்கமாகப் பேசியதாவது:

”காலி மனைக்குப் பஞ்சாயத்து அப்ரூவல் எப்போது நின்றதோ அப்போதே ரியல் எஸ்டேட் தொழிலில் இருந்தவர்கள் அத்தனைபேர் வாழ்க்கையும் வீணாகப் போய்விட்டது. முட்டி மோதி எதையாவது செய்வோம் என்று வட்டிக்கு வாங்கி இடத்துக்குக் கொண்டுபோய் கட்டினால், லேட்டானால் இடத்தைத் தரமாட்டேன்னு ஒரே பிரச்சினை.

அதையும் மீறி அப்ரூவ் வாங்கப்போனால் அவனுக்கு மூன்று ரூபாய் கொடு இவனுக்கு 2 ரூபாய் கொடு, அவனுக்கு 5 ரூபாய் கொடு என்று சொல்லி எங்களை உயிரோடு கொல்கிறார்கள். ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருக்கிறது. இந்தப் பக்கம் கஸ்டமருக்குப் பதில் சொல்ல முடியவில்லை. இன்னொரு பக்கம் நில உரிமையாளருக்குப் பதில் சொல்ல முடியவில்லை. மற்றொரு பக்கம் கடன் கொடுத்தவனுக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

இந்த ரியல் எஸ்டேட்டை 5, 6 ஆண்டுகாலமாக ஒழித்துக்கட்டிவிட்டார்கள் இந்த ஆட்சியிலே. நான் ஓடி ஓடி வாழ்க்கையில் என்னடா வாழ்க்கை என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு, வாழ்வதே ஒரு கேள்விக்குறியாக ஆக்கப்பட்டுவிட்டதே என்கிற நிலையில், எத்தனை பேருக்குடா பதில் சொல்வது, படுத்தால் தூக்கம் வரமாட்டேங்குது என்கிற நிலைக்கு வந்துவிட்டேன். நான் போய்த் தீரலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன்.

இருக்கும் மற்ற ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்காவது வாழ வழி செய்ய வேண்டும். ஸ்டாலின் , திருமாவளவன் இதற்கு ஏதாவது செய்யவேண்டும். அவர்கள் அடுத்து ஆட்சிக்கு வந்து செய்வார்கள் என்கிற நம்பிக்கையில் நான் மண்ணை விட்டுப் போகிறேன்.

என் குடும்பத்தை விட்டுச் செல்கிறேன் என்கிற கஷ்டம் இருக்கிறது. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தால் ஒவ்வொரு நாளும் செத்து செத்துப் பிழைக்க வேண்டி இருக்கும். நான் வருகிறேன், நன்றி ஜெய்ஹிந்த்”

இவ்வாறு உருக்கமாகப் பேசி காணொலியில் பதிவு செய்து அதை தனது முகநூல் பக்கத்திலும் சின்னராஜா பதிவிட்டுள்ளார்.  

ரியல் எஸ்டேட் தொழில் வீழ்ச்சியால் கடன் பிரச்சினையில் சிக்கி சின்னராஜா தவித்து வந்தாரா? என அவரது மனைவி மற்றும் நண்பர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது அத்தொழிலில் உள்ளவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன் எழும்பூரில் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் இதேபோன்றதொரு பிரச்சினையில் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close