தாம்பரம் மாநகர புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோடக் பொறுப்பேற்பு


தாம்பரம்: மாநில குற்ற ஆவணப் பிரிவு ஏடிஜிபி-யாக இருந்த அபின் தினேஷ் மோடக் இன்று தாம்பரம் மாநகர புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

2022 ஜனவரி 1-ம் தேதி அன்று தாம்பரம் காவல் ஆணையரகத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். அப்போது ஏடிஜிபி-யான எம்.ரவி தாம்பரம் மாநகரக் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இவர் மே 2022-ல் ஓய்வுபெற்ற பின் ஆவடி காவல் ஆணையராக இருந்த சந்திப்ராய் ரத்தோர் கூடுதல் பொறுப்பாக தாம்பரம் காவல் ஆணையர் பொறுப்பையும் கவனித்தார். பின்னர் 2022 ஜூன் மாதம் தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக, மாநில குற்ற ஆவணப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த அபின் தினேஷ் மோடக், தாம்பரம் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று மதியம் சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில் அபின் தினேஷ் மோடக் ஆணையராகப் பொறுப்பேற்றார். முன்னதாக, அவருக்கு காவலர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்து வரவேற்றனர். தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் 21 காவல் நிலையங்கள் உள்ளன. ஆணையரகத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு பத்திரிகையாளர்களை சந்திப்பதாக காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் தெரிவித்தார்.