தென்மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்ட பிரேம் ஆனந்த் சின்ஹாவின் பின்புலம் என்ன?


பிரேம் ஆனந்த் சின்ஹா

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையராக ஏற்கெனவே பணியாற்றிய பிரேம் ஆன்ந்த் சின்ஹா, தற்போது தென்மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, தென்மண்டல ஐ.ஜி.யாக நரேந்திரன் நாயர் பணிபுரிந்தார்.

இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் என்பதால், தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக, அவர் வடக்கு மண்டல ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக, அந்த மண்டலத்தில் ஐ.ஜி.யாக இருந்த கண்ணன் தென்மண்டல ஐ.ஜி.யாக பணி மாற்றம் செய்யப்பட்டு, கடந்த 6 மாதமாக பணிபுரிந்தார்.

இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பணி இடமாற்ற உத்தரவு நேற்று வெளியானது. இதில் தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் தென் சென்னை கூடுதல் காவல் ஆணையராக மாற்றப் பட்டார். அவருக்குப் பதிலாக, அங்கு பணிபுரிந்த பிரேம் ஆனந்த் சின்ஹா தென்மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், 2001-ம் ஆண்டு தொகுப் பில் (பேட்ச்) ஐபிஎஸ் அதிகாரி யாக தேர்வானவர். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உதவி எஸ்.பி.யாகவும், பெரம் பலூர், காஞ்சிபுரத்தில் எஸ்.பி.யா கவும் பணியாற்றியுள்ளார். பின்னர், சென்னையில் இணை, கூடுதல் ஆணையர், வடக்குமண்டல ஐ.ஜி. மற்றும் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவிலும் பணிபுரிந்த இவர், 2020-ல் மதுரை மாநகரக் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டு, ஒன்றரை ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தார். இங்கு பணியாற்றியபோது, அவர் குற்றங்களை தடுப்பதில் அதிக கவனம் செலுத்தினார். இதற்காக பழைய குற்றவாளிகள், ரவுடிகள் பட்டியலை ஆவணப் படுத்தி, குற்றவாளிகளை துரிதமாக கைது செய்தார்.

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்தும், ஜாமீனில் வெளி வருவோரின் நடமாட்டத்தையும் கண்காணித்தார். குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் அதிகமான சிசிடிவி கேமராக்களை பொருத்த நடவடிக்கை மேற்கொண்டார். இதற்காக, அவருக்கு 2022-ல் தமிழக அரசின் சிறந்த பணிக்கான விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தென்மண்டல ஐ.ஜி.யாக பொறுப்பேற்கும் ஒவ்வொரு வருக்கும் கஞ்சா, தொடர் கொலை போன்ற குற்றச் செயல்களை தடுப்பது என்பது பெரும் சவாலாக அமைகிறது. ஏற்கெனவே தொழில்நுட்ப அடிப் படையில் குற்றச் செயல்களை தடுக்கும் பாணியை கையாண்ட ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா, தென்மண்டலத்தில் தனது திறமையை பயன்படுத்தி ரவுடிகளை ஒடுக்கி, குற்றங்களை தடுப்பார் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இன்னும் ஓரிரு நாளில் அவர் தென்மண்டல ஐ.ஜி.யாக பொறுப்பேற்பார், என காவல் துறையினர் தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.