[X] Close

கடற்கரைக்கு வந்த இளைஞர்களை தாக்கி பணம் பறித்த போலீஸார்: ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை: காவல்துறைக்கு  மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்


  • kamadenu
  • Posted: 20 May, 2019 21:06 pm
  • அ+ அ-

கடற்கரைக்கு வந்த இளைஞர்களை தாக்கி ஆடைகளை உருவி ரூ.2000 பணத்தைப் பறித்த எஸ்.ஐ, மற்றும் காவலர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது மாநில மனித உரிமை ஆணையம்.

சனிக்கிழமை இரவு சென்னை திருவான்மியூர் கடற்கரைக்கு கோவையைச் சேர்ந்த யஷ்வந்த் மற்றும் திருவான்மியூரைச் சேர்ந்த கார்த்தி இருவரும் வந்துள்ளனர். 11 மணி அளவில் அப்பகுதியில் ரோந்து வந்த கானத்தூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த எஸ்.ஐ. பாலசுப்ரமணியம், காவலர் தணிகாச்சலம் இருவரும் யஷ்வந்த் மற்றும் கார்த்தி இருவரையும் விசாரித்துள்ளனர்.

போலீஸாரிடம் யஷ்வந்த கூறுகையில், ''நாங்கள் திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இருவரும் ஒன்றாக மென்பொறியாளர்களாக வேலை செய்தோம். தற்போது நண்பர் கார்த்தி கோவைக்குச் சென்றுவிட்டார். விடுமுறையில் சென்னை வந்தவர் என்னைப் பார்க்க வந்தார். அப்படியே கடற்கரைக்கு வந்து பேசிக் கொண்டிருக்கிறோம்'' என்று கூறியுள்ளார். 

ஆனால், இருவர் சொல்வதையும் காதில் வாங்காத போலீஸார்  இருவரையும் மிரட்டி, ''5,000 ரூபாய் பணம் கொடு. இல்லாவிட்டால் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று வழக்குப் போட்டு அசிங்கப்படுத்தி விடுவேன்'' என்று மிரட்டியுள்ளனர்.

''சார், நாங்கள் என்ன தவறு செய்தோம், இருவரும் கவுரவமான தொழில் செய்பவர்கள். எங்களை இப்படி மிரட்டுகிறீர்களே'' என்று இளைஞர்கள் கேட்டுள்ளனர்.

பின்னர் தங்களிடம் ரூ.5000 பணம் இல்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த போலீஸ் எஸ்.ஐ மற்றும் காவலர் அவர்களை அடித்து, அவர்கள் ஆடைகளை உருவி அவர்களிடமிருந்து ரூ 2000 பணத்தை பறித்துக் கொண்டு, ''விஷயத்தை வெளியில் சொன்னால் தூக்கி உள்ளே போட்டு விடுவேன்'' என்று மிரட்டிச் சென்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட இருவரும் மறுநாள் காவல் நிலையத்திலும், துணை ஆணையரிடமும் புகார் அளித்துள்ளனர். புகாரை அடுத்து இரண்டு இளைஞர்களையும் மிரட்டி பணம் பறித்து தாக்கிய எஸ்.ஐ.  பாலசுப்ரமணியம் காவலர் தணிகாசலம் இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி துணை ஆணையர் உத்தரவிட்டார்.

மேற்கண்ட செய்தியை பத்திரிகைகள் வாயிலாக அறிந்த மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. காவலர்கள் மீது ஏன் வழிப்பறி வழக்கு பதிவு செய்யவில்லை, காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காத கானத்தூர் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?  என்று கேட்டுள்ளது ஆணையம்.

இதுகுறித்து தெற்கு மண்டல இணை ஆணையர் மகேஷ்வரி மற்றும் அடையாறு துணை ஆணையர் செஷாங் சாய் 4 வாரத்தில் விளக்கமளிக்க மாநில மனித உரிமை ஆணைய நீதித்துறை உறுப்பினர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close